ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ மாலிக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழக நடிகர்கள், நடிகைகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் மீமிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் தஸ்தகீர். ஜவுளிக் கடை வேலைக்காக மலேஷியாவுக்குச் சென்றனர். அங்கு ஊழியராக பணிபுரிந்து வந்தவர், திடீரென தொழிலதிபராக உயர்ந்தார். பின்னர், திரைப்பட வினியோகம், தயாரிப்பு என தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். தவிர, தங்கம், வைர நகை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இதன் பிறகு, டத்தோ மாலிக் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். இவர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவார். மலேசியாவில் ஒரு கலைநிகழ்ச்சி நடக்கிறது என்றால், அது டத்தோ மாலிக் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். அந்தளவுக்கு பிரபலமாக இருந்தார்.
குறிப்பாக, நடிகைகளை தனி விமானத்தில் அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளை செய்து தருவதில் கெட்டிக்காரராம். இதனால் இவரை நடிகைகள் ‘முதலாளி’ என்றுதான் அழைப்பார்களாம். ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தை மலாய் மொழியில் தயாரித்து, விநியோகம் செய்து பிரபலமானார்.
இந்த நிலையில்தான், சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் டத்தோ மாலிக்கை மலேஷிய ஊழல் தடுப்பு ஆணைய போலீஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள். இவ்வழக்கின் கீழ் ஒருவர் கைதானால் உடனே அவரது சொத்துக்கள் முடக்கப்படும். அதன்படி, டத்தோ மாலிக் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. டத்தோ மாலிக் கைது செய்யபட்டுள்ள சம்பவம் தமிழ் நடிகர், நடிகைகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.