ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 17 அன்று பொது விடுமுறையை அறிவித்து மேற்கு வங்க மாநில அரசு சார்பில் நேற்றிரவு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை முதலில் வரவேற்ற பாஜக, தேர்தலை முன்னிட்டு மம்தா பானர்ஜி நாடகம் ஆடுகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர்.
துர்க்கை மற்றும் காளி பூஜைகள் மேற்கு வங்க மாநிலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களாகும். அந்த விழாக்களுக்கு பொது விடுமுறைகளும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜகவின் கண்டனம் மற்றும் கோரிக்கைகள் தொடர்ந்தபோதும், ராம நவமிக்கு மேற்கு வங்கத்தில் பொது விடுமுறை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பாஜக ஐடி பிரிவின் தலைவரான அமித் மாளாவியா “ஜெய் ஸ்ரீராம் என்று ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் கோபத்தால் நீலநிறமாக மாறக்கூடியவர் மம்தா பானர்ஜி. இவர் தற்போது, மேற்கு வங்கத்தில் ராம நவமியை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளார். தனது இந்து விரோதப் பிம்பத்தை மீட்டெடுக்க இப்படிச் செய்துள்ளார். தாமதமான முடிவு என்றாலும் மிகவும் முக்கியமானது. மேலும் ராம நவமி ஊர்வலங்களில் கற்கள் எறியப்படுவதை தடுப்பதற்கு முதல்வர் ஆவண செய்வாரா?” என்று தனது எக்ஸ் தள பதிவில் கோரி உள்ளார்.