மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை கருணாநிதி திட்டமிட்டு நடத்தியது என்றும், கருணாநிதியைப் போன்ற கொடூர குற்றவாளிகளை பார்க்க முடியாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், பல வருடங்களாகவே ஊதிய உயர்வு கேட்டு போராடி வந்தனர். ஆனால், நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. எனவே, 1999-ம் ஆண்டு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில், ஜூன் 8-ம் தேதி போராட்டம் நடத்தினர். இவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து மறுநாள் பெண்கள் போராட்டம் நடத்தினர். இவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆகவே, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 23-ம் தேதி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்க பேரணியாகச் சென்றனர் சுமார் 10,000 தொழிலாளர்கள். ஆனால், அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் போலீஸார் தடுத்தனர். இதனால், போலீஸாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.
இதனால், போலீஸாரிடமிருந்து தப்பிக்க தொழிலாளர்கள் பலரும் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்தனர். அவர்களை மீண்டும் கரையேறவிடாமல் தடுத்த போலீஸார், அவர்களை ஆற்றுக்குள் மூழ்கடித்து சாகடித்தனர். இதில், அதிகாரப்பூர்வமாக ஒரு சிறுவன் உட்பட 17 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், உண்மையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அப்போது, ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு.
இந்த நிலையில்தான், மாஞ்சோலை சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகவும், இதற்கெல்லாம் காரணம் கருணாநிதிதான் என்றும் மூத்த பத்திரிகையளர் தமிழா தமிழா பாண்டியன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “மாஞ்சோலை சம்பவம் கருணாநிதி திட்டமிட்டு அரங்கேற்றிய படுகொலை. கருணாநிதியைப் போன்ற ஒரு கொடூரமான குற்றவாளியை இந்த உலகத்திலேயே பார்க்கவே முடியாது. இச்சம்பவத்தில் 200 பேர் பலியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக 243 விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டும், ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை” என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.