5 எம்.எல்.ஏ.க்கள் ‘ஜூட்’: ஐக்கிய ஜனதா தளம் ‘ஹாட்’!

5 எம்.எல்.ஏ.க்கள் ‘ஜூட்’: ஐக்கிய ஜனதா தளம் ‘ஹாட்’!

Share it if you like it

மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமானதால், அக்கட்சித் தலைமை பயங்கர அதிர்ச்சியில் இருக்கிறது.

பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார், அம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்தார். பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராக இருந்தார். இரு கட்சிகளும் இணைந்து அமைச்சரவையை பகிர்ந்து கொண்டன. இந்த சூழலில், திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதீஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொண்டதோடு, முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர், மகா பந்தன் கூட்டணியான காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு இணைந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி முதல்வரானார்.

இதனால், பா.ஜ.க. தலைமை நிதீஷ்குமார் மீது கடும் ஆத்திரம் பிளஸ் அதிருப்தியில் இருந்தது. மேலும், அடிக்கடி கூட்டணியை மாற்றும் நிதீஷ்குமாரின் நடவடிக்கை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லை. இதையடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பா.ஜ.க.வுக்கு தாவினார்கள். குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 7 எம்.எல்.ஏ.க்களும் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால், அருணாச்சலப் பிரதேசத்தில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூடாரம் காலியானது. இந்த சூழலில்தான், மணிப்பூர் மாநிலத்தில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் நேற்று பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். அதாவது, மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பீரேன் சிங் இருந்து வருகிறார். இம்மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இவர்களில் 5 பேர் நேற்று பா.ஜ.க.வில் இணைந்து விட்டனர். இதன் மூலம் மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூடாரம் காலியாகி இருக்கிறது.

இதுகுறித்து பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசத்திலும், மணிப்பூரிலும் ஐக்கிய ஜனதா தளம் காலியாகி விட்டது. விரைவில் பீகாரிலும் ஐக்கிய ஜனதா தளம் காணாமல் போய் விடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம் பாட்னாவில் நேற்று நடந்தது. பின்னர், பேசிய நிதீஷ்குமார் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் போனில் பேசியிருக்கிறார் நிதீஷ்குமார். இதன் தொடர்ச்சியாக, நாளை டெல்லி செல்லும் நிதீஷ் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Share it if you like it