கூலி உயர்வுக்காக சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற மாஞ்சோலை பைல்ஸ் வருமா?!
தமிழகத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்து உள்ள மாஞ்சோலைத் தோட்டத்தில், ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த பட்டியலின மக்கள் பெருமளவில் மாஞ்சோலைத் தோட்டத்தில், கூலி வேலைக்காக அமர்த்தப் பட்டனர்.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (Bombay Burma Trading Corporation) பி.பி.டி.சி. (BBTC) என்ற நிறுவனம், 1929 ஆம் ஆண்டு, சிங்கம்பட்டி ஜமீன்தாரின் 8 ஆயிரத்து 374 ஏக்கர் நிலத்தை, குத்தகைக்கு வாங்கியது.
“ஜமீன் ஒழிப்பு” சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்ததன் காரணமாக, அந்த விளை நிலங்கள் அரசுடமை ஆனது. எனினும், அந்த இடத்தை மீண்டும் குத்தகைக்கு எடுக்க, பி.பி.டி.சி. நிறுவனம் விரும்பியது. அப்போதைய ஆளும் கட்சியான, காங்கிரஸ் கட்சியிடம், அந்த இடத்திற்கான குத்தகையை புதுப்பித்துக் கொண்டது, அந்த நிறுவனம்.
அந்தத் தோட்டத்திலேயே, பல தலைமுறைகளாக வாழ்ந்து, வளர்ந்து, தங்கி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து வந்தனர்.
குறைந்த அளவே ஊதியம் :
நாள் ஓன்றுக்கு 53 ரூபாய் என, மிகவும் குறைந்த அளவே, ஊதியம் பெற்று வந்தனர், தொழிலாளர்கள். அந்த ஊதியத்தை வைத்து, குடும்பம் நடத்த முடியாத சூழல் இருந்ததால், கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, தோட்டத் தொழிலாளர்கள் ஒன்று கூடி, 1999 ஆம் ஆண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் கோபம் கொண்ட தோட்ட நிர்வாகிகள், காவல் துறையினரை வரவழைத்து, வீட்டில் இருந்த 127 கூலித் தொழிலாளர்களை, இரவோடு இரவாக, கைது செய்தனர். இதனால் தோட்ட நிர்வாகிகளுக்கும் – தொழிலாளர்களுக்கும் இடையேயான போராட்டம், நீடித்துக் கொண்டே வந்தது.
மேலும் தோட்ட நிர்வாகத்தினர், தற்காலிக ஊழியர்களாக பணி புரிபவர்களை, ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிகழ்வு நிர்வாகம் – தொழிலாளர்களிடையே, மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைப்பு :
தோட்டத்தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, வேலை நிறுத்தம் செய்தனர். அதனால், 198 பெண்கள் உட்பட, 652 பேர் கைது செய்யப் பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும், ஊதிய உயர்வு கேட்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, ஜூலை மாதம் இருபத்தி மூன்றாம் தேதி, 1999 ஆம் ஆண்டு, தொழிலாளர்களின் குடும்பம் அணிவகுத்து சென்றது.
அந்தப் பேரணியில், தோட்டத் தொழிலாளர்களுடன் புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற பல கட்சிகளுடன், தற்போதைய தமிழக சட்டசபையின் சபாநாயகரும், அப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, அப்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் என பல சட்டமன்ற உறுப்பினர்களும், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர்.
பிரமாண்டமான பேரணி :
சுமார் 5 ஆயிரம் பேர், அந்த போராட்டத்தில் பங்கேற்றதாக, செய்திகள் வெளியாகின. பாதுகாப்புப் பணியில், 700 போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப் பட்டது. சுமார் 5 ஆயிரம் பேருடன் ஊர்வலமாக சென்றவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடையும் சுமார் 50 மீட்டருக்கு முன்னரே, தடுத்து நிறுத்தப் பட்டனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதிக்க வேண்டி, ஊர்வலத்தில் இருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். எனினும் அந்த கோரிக்கை, முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதி அளிக்க வேண்டி, அப்போதைய போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமாரிடம், கூடி இருந்த கூட்டத்தினர் கோரிக்கை வைத்தனர். அவர் மறுத்து விட்டதால், போராட்டக்காரர்கள் தாமிரபரணி ஆற்றின் கரை வழியே, ஆட்சியர் அலுவலகம் செல்ல முயற்சி செய்தனர்.
தடியடி – துப்பாக்கிச் சூடு :
இதனால் கோபம் கொண்ட போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் கூட்டத்தில் இருந்த மக்கள் சலசலத்து போய், அங்கும் இங்கும் ஓடியதால், அந்த இடமே அலங்கோலமாகியது.
போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்து, பயந்து போன போராட்டக்காரர்கள், தலைதெறிக்க ஓடினார்கள். சிலர் ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில், 17 பேர் உயிர் நீத்தனர். அதில் இரண்டு பெண்களும், இரண்டு வயது குழந்தையும் அடக்கம்.
திமுகவின் அலட்சியப் போக்கு :
போராட்டக்காரர்களை சந்திக்க, அனுமதி அளித்து இருந்தால், மிகப் பெரிய கலவரம் தடுக்கப் பட்டு இருக்கலாம். ஆனால், ஆட்சியில் இருந்த திமுக, அதனை செய்யவில்லை. அதன் காரணமாகவே, மிகப் பெரும் கலவரம் ஏற்பட்டது என, பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்தனர்.
தாக்கப் பட்ட பத்திரிகையாளர்கள் :
போலீசார் அடிப்பதை, படம் பிடிக்க முயற்சி செய்த பத்திரிகையாளர்கள், கொடூரமாகத் தாக்கப் பட்டனர். அவர்கள் படம் எடுத்த அந்த கேமரா, பிடுங்கி எறியப் பட்டதாக, மூத்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் துயர சம்பவத்தை, ஆங்கிலப் பத்திரிகைகள், ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்ற “ஜாலியன் வாலாபாக்”, சம்பவத்துடன் ஒப்பீட்டு எழுதினர்.
பாதிக்கப் பட்ட தொழிலாளர்களுக்கு, சரியான நீதி இன்னும் கிடைக்கவில்லை எனவும், ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
போராடும் தொழிலாளர்களை, ஆட்சியாளர்கள் சந்தித்து இருந்தால், பெரும் கலவரம் தவிர்க்கப் பட்டு இருக்கலாம்.
அப்பாவித் தமிழர்கள் :
அப்போது ஆட்சியில் இருந்த திமுக, இந்த சம்பவத்தை சரியாகக் கையாண்டு இருந்தால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப் பட்டு இருக்கும். தங்களுடைய சொந்த மாநிலத்திலேயே, காவல் துறையினரால் சுடப் பட்டு, அப்பாவித் தமிழர்கள், தங்களுடைய இன்னுயிரை நீத்தனர்.
அந்தத் துயர சம்பவம் நடந்த நாளான, ஜூலை மாதம் 23 ஆம் தேதி, ஆண்டு தோறும், போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பொது மக்கள் அஞ்சலி செலுத்தி, உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கூலி உயர்வு கேட்டதற்காக, சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, “மாஞ்சோலை பைல்ஸ்” என்ற படம் வருமா? என்பதே பொது மக்களின் எதிர் பார்ப்பாக இருந்து வருகின்றது.
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
உதவிய தளங்கள் :
https://frontline.thehindu.com/the-nation/article30257742.ece