நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்த தேயிலை சோலை.
ஆம்! மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பம்பாய் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு 110 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு.
எல்லா ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் இருக்கும் பிரச்சனைகள் மாஞ்சோலையிலும் இருந்தது.
தொழிலாளர்களுக்கு ஊதியப் பற்றாக்குறை.
நாளொன்றுக்கு எழுபது ரூபாய் மட்டுமே கூலியாகத் தரப்பட்ட நிலையில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராடினர்.
அவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியவர் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணஸ்வாமி.
ஜூன் 8 ,1999 அன்று டாக்டர் கிருஷ்ணஸ்வாமி தலைமையில் தொழிலாளர்கள் நெல்லை ஆட்சியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களைக் கைது செய்து திருச்சி சிறையிலடைத்தது அன்றைய திமுக அரசு.
மறுநாள் , தங்கள் கணவர்களை விடுவிக்கக் கோரிப் போராடிய பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தான் ஜூலை 23, 1999 அன்று தொழிலாளர்கள் மீண்டும் அணிதிரண்டனர்.
சிறையிலிருந்த 652 பேரை விடுவிக்கவேண்டும்;
தினக்கூலியை நூறு ரூபாயாக உயர்த்தவேண்டும்;
பெண்களுக்கு பேறுகால விடுப்பு மற்றும் எட்டு மணிநேர வேலையில் இடையிடையே ஓய்வு தரவேண்டும் ;
அடிப்படை வசதிகள் கூட இல்லாத கொட்டகைகளில் தங்க வைக்கக் கூடாது
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.புதிய தமிழகம் , சி.பி.ஐ , சி.பி.எம் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிப் பிரதிநிதிகளுடன் பொதுமக்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேரணியில் கலந்துகொண்டனர். ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற கூட்டத்தை ஒடுக்க நினைத்த காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகள் வீசியது.சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் மக்கள் சிதறியோடினர்.
விடாமல் துரத்தியது போலீஸ் தடியடி.
பயத்தில் செய்வதறியாது ஓடிய போராட்டக்காரர்கள் பலர் தாமிரபரணியில் குதித்துவிட்டனர்
. போலீஸ் அடித்ததில் பலத்த காயமடைந்த சிலரும் தாமிரபரணியில் விழுந்த சிலரும் சேர்ந்து 17 பேர் உயிரிழந்தனர்.
நியாயமான கூலி கேட்டு நேர்மையாகப் போராடிய அப்பாவி மக்களை திமுக அரசும் ,
காவல்துறையும் அதிகார வெறியில் படுகொலை செய்தது தமிழகத்தையே உலுக்கியது.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்துக்கு ஆட்சியாளர்களால் தலைகுனிவு ஏற்பட்ட நாள் ;
ஜனநாயகத்துக்குப் பின்னடைவு ; தமிழகத்தின் கறுப்பு நாள் – ஜூலை 23 1999.
படுகொலையான 17 அப்பாவிகளின் நினைவாக இன்றும் அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
திருமதி.பிரியா ராம்குமார்