‘மன் கி பாத்’ 100-வது நிகழ்ச்சி… 63 மொழிகளில் ஒலிபரப்பு!

‘மன் கி பாத்’ 100-வது நிகழ்ச்சி… 63 மொழிகளில் ஒலிபரப்பு!

Share it if you like it

பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ உரையின் 100-வது நிகழ்ச்சி, 63 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

பாரத பிரதமராக மோடி கடந்த 2014-ல் பதவியேற்ற பிறகு, அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 11:30 மணி வரை, ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற தலைப்பில், வானொலியில் ஹிந்தியில் உரையாற்றி வருகிறார். இது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சூழலில், மன் கி பாத் 100-வது பகுதி நாளை ஒலிபரப்பாகிறது. இதை 63 மொழிகளில் மொழி பெயர்த்து ஒலிபரப்பு செய்ய அகில இந்திய வானொளி தயாராகி வருகிறது.

இதுகுறித்து இதுவரை ஒலிபரப்பான 99 பகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்து குரல் கொடுத்து, 100-வது நிகழ்ச்சிக்கு தயாராகி வரும் சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ராமசாமி சுதர்சன், தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “மொழிபெயர்ப்பு செய்வதோ, குரல் கொடுப்பதோ எனது பணி அல்ல. ஆனாலும், ஆர்வம் காரணமாக 2002 முதல் ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் உரைகளை தமிழில் மொழிபெயர்த்து, குரல் கொடுத்து வந்தேன். அந்த அனுபவம் இருந்ததால், பிரதமர் மோடியின், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியையும் மொழிபெயர்த்து, குரல் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ஹிந்தி பிரசார சபாவில் ஹிந்தி படித்தேன். சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லுாரியில் பி.ஏ. தத்துவம் படிக்கும்போது, இரண்டாவது மொழிப் பாடமாக ஹிந்தியை தேர்வு செய்தேன். இதுதான் இப்போது எனக்கு உதவுகிறது. ஆங்கிலம் உள்பட நம் அரசியலமைப்பு அட்டவணையில் உள்ள 23 மொழிகள், சத்தீஸ்கரி, லடாகி உள்ளிட்ட 29 வட்டார மொழிகள், சீன மொழி, பிரஞ்சு, அரபி உள்ளிட்ட 11 வெளிநாட்டு மொழிகள் என 63 மொழிகளில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தமிழில் நான் மட்டுமே மொழிபெயர்த்து குரல் கொடுக்கிறேன். பிற மொழிகளில் பலர் மொழிபெயர்க்கின்றனர். குரல் கொடுப்பவர்களும் மாறியபடி இருக்கின்றனர்.

”மனதின் குரல்’ மட்டுமல்ல, 4 முறை பிரதமர் மோடியின் மேடை பேச்சை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, மோடி என்னை முதுகில் தட்டி பாராட்டினார். அது எனக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது. என் குரல்தான் மக்களுக்கு பரிச்சயமே தவிர, என் முகம் யாருக்கும் தெரிவாது. ஆனால், 4 முறை மோடியின் மேடை பேச்சை மொழிபெயர்த்ததால் என்னை பலரும் அடையாளம் கண்டு பாராட்டி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் என் குல தெய்வம் மதுரை அழகரின் அருளே காரணம். மனதின் குரலின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொரு வகையிலும் சிறப்புதான். ஆகவே, 100-வது பகுதியில் பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார், எவ்வளவு நேரம் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவரை போல, நானும் அதற்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்றார்.


Share it if you like it