மாவீரன் அழகுமுத்துக் கோன் | Freedom75 | சுதந்திரம்75

மாவீரன் அழகுமுத்துக் கோன் | Freedom75 | சுதந்திரம்75

Share it if you like it

வீரன் அழகுமுத்துக் கோன்

1759ல் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். கான்சாகிப் தலைமையிலான கிழக்கிந்திய கம்பெனிப் படையும், அழகு முத்துவின் படையும் மோதின. இந்தச் சண்டை சிதம்பரனார் மாவட்டத்திலுள்ள பெத்தநாயகனூர் கோட்டையில் நடைபெற்றது. அழகு முத்துவின் படை தோற்கடிக்கப் பட்டு, கம்பெனிப் படையால் பிடிபட்ட அழகுமுத்துவை ஒரு பீரங்கியினால் தவிடு பொடியாக்கினார்கள், வெள்ளையர்கள்.

1878ல், சுவாமி தீக்ஷிதரால் எழுதப்பட்ட “வம்சமணி தீபிகை” என்ற தமிழ்நாட்டுச் சரித்திரப் புத்தகத்திலும், 1890-இல் வெளியிடப்பட்ட கணபதி பிள்ளையால் எழுதப்பட்ட “எட்டயபுரம் கடந்த காலமும், நிகழ் காலமும்” என்னும் சரித்திரப் புத்தகத்திலும் சரித்திரச் சான்றுகளுள்ளன.

சேர்வை என்றால் ‘தளபதி’ என்று பொருள். இந்த வம்சத்தின் மூதாதையரான அழகப்பன் சேர்வை, மதுரையில் ஒரு சிறந்த வீரர். கள்ளர்களிடமிருந்து  மதுரையை காத்த போது, நாயக்க மன்னர் கொடுத்த பட்டம் ‘சேர்வை’ என்பது. நாயக்க மன்னர் அழகப்பனை திருநெல்வேலியின் தளபதியாகவும் நியமித்தார்.

கெச்சிலனன் சேர்வை – அழகப்பனின் மாமன் 1691ல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘சூரன்குடி கோட்டைக்கு, கலகத்தை ஒடுக்கி அமைதியை நிலை நாட்ட கெச்சிலனன் அனுப்பப் பட்டார். மறைந்திருந்த ஒரு துப்பாக்கி வீரன் கெச்சிலனனைச் சுட்டுத் தள்ள, வாரிசு இல்லாமல் அவர் இறந்தார். கெச்சிலனின் மருமகன் அழகு முத்து பதவி ஏற்றார். எட்டயபுரத்து படையின் தலைவனாக நியமிக்கப் பட்டார். அவருடைய வம்சத்தவர்கள் “சேர்வை” என்ற பெயரை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள்.

ராமநாதபுரம் சேதுபதியின் அனுமந்தக் குடிக்கோட்டையை 1725ல், தஞ்சாவூர் மன்னன் தாக்கிய போது, எட்டயபுரத்து பொலிகர் உதவியை சேதுபதி நாடினார். 5000 போர் வீரர்களுடன், அழகு முத்து போருக்கு அனுப்பப் பட்டார், சேதுபதி வென்றார். ஆனால் அழகுமுத்து சோவைசணடையில் இறந்தார். அதன் பிறகு அவரது மகன் அழகு முத்துக்கோன் படைக்கு தளபதியானார்.

1736ல், ஆற்காட்டைச் சேர்ந்த  ‘சந்தாசாகிப், ராணி மீனாக்ஷியிடமிருந்து மதுரையை கைப்பற்றினான். தன் தம்பியான ஸதிஸாகிபை, பொலிகர்களிடம், வரி வசூலிக்க திருநெல்வேலிக்கு அனுப்பினான். அவர்கள் வரி கொடுக்க மறுத்தனர். இதற்கிடையில் ஆற்காட்டை பிடிக்க, சந்தாசாகிப்புக்கும் – முகம்மது அலிக்கும் சண்டை மூண்டது. ஆங்கிலேயர் முகம்மது அலிக்கும், பிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாகிப்பிற்கும் உதவினார்கள். இதில் ஆங்கிலேயர்கள் வென்றனர். ஆங்கிலேயர்கள் பொலிகர்களிடமிருந்து வரி வசூலிக்க, ‘கர்னல் ஹிரான்’ என்பவனின் தலைமையில், படையொன்றை அனுப்பினர்.

எட்டயபுரத்தின்  28வது அரசரான ஜகவீரராம எட்டப்பர், வெள்ளையர்களையும் அவர்களின் பிரதிநிதியான ஆற்காடு நவாபையும் எதிர்த்தார். கிழக்கிந்தியக் கம்பெனி கர்னல் ஹிரானை பதவி நீக்கம் செய்து, கான்சாகிப் என்ற விசுவாசமுள்ள முகமதியனை பொலிகரிடம் வரி வசூலிக்க அனுப்பினார்கள். அவர்களை அடக்கும் படியும் உத்திரவிட்டார்கள். கான்சாகிப் பெரும் சேனையுடன் எட்டயபுரத்தைத் தாக்கினான். ஜகவீரராம எட்டப்பரின் சேனையை அழகுமுத்துக் கோன் வழி நடத்திச் சென்றார். ஆனால் அழகுமுத்துவின் சொந்தக்காரர் குருமலை துரை  அவருக்கு எதிராகச் சதி செய்ய, கான்சாகிபின் வீரர்களின் எண்ணிக்கை மிகுதியால் திணறடிக்கப் பட்டு தோற்றுப் போனார்.

ஜகவீரராம எட்டப்பரும் அழகுமுத்தும் பெருநாழி  காடுகளில் மறைந்தார்கள். கான்சாகிப் குருமலை துரையை எட்டயபுரத்து அரசராக்கிய செய்தியை கேள்வியுற்று மனம் வெதும்பிய எட்டப்பர் காட்டிலேயே இறந்தார்.

ஜகவீர எட்டப்பரின் மகனான வெங்கடேச எட்டப்பரை, அழகுமுத்து காட்டிலேயே அரசராக்கினார். அழகுமுத்து அருகிலுள்ள கிராமங்களிலிருந்து இளைஞர்களைப் படையில் சேர்த்து, ஒரு பெரிய படையுடன் கிழக்கிந்தியக் கம்பெனியை பெத்தநாயக்கனூர் கோட்டையில் தங்கி தாக்க விரும்பினார்.

குருமலை துரையின் மந்திரியான சிவசங்கரன் பிள்ளை, கான்சாகிப்பிற்கு அழகுமுத்துவின் திட்டத்தைப் பற்றி தகவல் கொடுத்தான். 1759 ஜூலை மாதம் 300 குதிரை வீரர்களுடனும் 700 சிப்பாய்களுடனும் கான்சாகிப் பெத்தநாயக்கனூர் கோட்டையைத் தாக்கினான், நீண்ட சண்டைக்குப் பின் கான்சாகிப் அழகுமுத்துவை தோற்கடித்தான்.

அழகுமுத்துக்கோனும் வெங்கடேஸ்வரேட்டு சேர்வையும், முத்தழகு சேர்வையும் முத்திராலனும், அவன் தம்பியும் பீரங்கி வாயில் கட்டப்பட்டு சுக்கு நூறாகி சிதறினார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சேமாபுதூர் ஜெகவீர எட்டு மணியக்காரரும், அவருடன் சேர்ந்து 248 பேர்களின் வலது கைகள் துண்டிக்கப்பட்டன.

அழகுமுத்துவும் அவர் போர் வீரர்களும் சிந்திய ரத்தம் சுதந்திர நெருப்பை கொழுந்து விட்டெறியச் செய்யும் விறகாய் அமைந்தது. பிற்காலத்தில் 1799ல், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் முதலான பொலிகர்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது.

–  குரு ப்ரியா


Share it if you like it