காதலிக்க மறுத்த பெண்: வீடு புகுந்து தூக்கிய கும்பல்!

காதலிக்க மறுத்த பெண்: வீடு புகுந்து தூக்கிய கும்பல்!

Share it if you like it

மயிலாடுதுறையில் காதலிக்க மறுத்த பெண்ணை, வீடு புகுந்து தூக்கிய வாலிபர் உள்ளிட்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள மயிலம்மன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பட்டதாரி இளம்பெண் மலர்விழி (பெயர் மாற்றம்). அதே பகுதியில் வசித்து வருபவர் மூதாட்டி பிரேமா. இவரது பேரன் விக்னேஸ்வரன், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், பாட்டி வீட்டில் சில காலம் தங்கி இருந்தபோது, மலர்விழியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல், அவருடன் பழகுவதை மலர்விழி நிறுத்தி விட்டார். இதன் பிறகும், விக்னேஸ்வரன் பின்தொடர்ந்து வந்ததோடு, மலர்விழியை காதலிப்பதாகக் கூறி அவரது வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இதுகுறித்து மலர்விழியின் பெற்றோர் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள். போலீஸாரும் விக்னேஸ்வரனை அழைத்து கண்டித்ததோடு, இனி மலர்விழியை தொந்தரவு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி இருக்கிறார்கள். எனினும், கடந்த ஜூலை 12-ம் தேதி மலர்விழியை கடத்த முயன்றிருக்கிறார் விக்னேஸ்வரன். அவரிடமிருந்து தப்பி வந்த மலர்விழி, மீண்டும் மயிலாடுதுறை போலீஸில் புகார் செய்திருக்கிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுமார் 15-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்த விக்னேஸ்வரன், மலர்விழியின் வீட்டுக்குள் நுழைந்து, அவரை வலுக்கட்டாயமாக  தூக்கிச் சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து அவரது பெற்றோர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்பாட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய போலீஸார், வீட்டில் இருந்த  சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடிச் சென்றனர். மேலும், தமிழகம் முழுவதுமுள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த சூழலில், விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி டோல்கேட் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், விக்னேஸ்வரன் அண்கோ வந்த காரை மடக்கி பிடித்து, மலர்விழியை மீட்டனர். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தவிர, கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it