நிருபர்களை மிரட்டிய உதயநிதி பவுன்சர்கள்: இந்த பில்டப் தேவையா..? பொதுமக்கள் முகம் சுளிப்பு!

நிருபர்களை மிரட்டிய உதயநிதி பவுன்சர்கள்: இந்த பில்டப் தேவையா..? பொதுமக்கள் முகம் சுளிப்பு!

Share it if you like it

மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில், அவரது பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்கள், செய்தியாளர்களை மிரட்டி அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மக்களின் குறைகளை தெரிவிக்கும் உதவி எண் மற்றும் இ-சேவை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்ட செய்தியாளர்கள் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி செய்தியாளர்களை பவுன்சர்கள் வெளியேற்றினர். தொடர்ந்து, தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் உதயநிதி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியிலும், செய்தியாளர்களை செய்தி எடுக்க விடாமல் பவுன்சர்கள் தடுத்ததோடு, தகாத வார்த்தைகளில் மிரட்டினர். இதனால் செய்தியாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமீபகாலமாக உதயநிதி பங்கேற்கும் விழாவில், போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி பவுன்சர்கள் பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க தமிழக காவல்துறை இருக்கும்போது, தனிப்பட்ட முறையில் பவுன்சர்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்படுவது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், அமைச்சருக்கு காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா அல்லது தனது கட்சித் தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லையா? இந்த பவுன்சர்களுக்கு அதிகாரம் கொடுத்து திமிர் காட்டச் சொன்னது யார்? இந்த பவுன்சர்கள் பற்றி உதயநிதிக்கு தெரியுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக முதல்முறையாக அமைச்சராகி இருக்கும் உதயநிதி, தற்போதே இவ்வளவு பில்டப் செய்கிறார் என்றால், எதிர்காலத்தில் இவரது பில்டப் எந்தளவுக்கு இருக்கும் என்றும் பொதுமக்களும் செய்தியாளர்களும் முகம் சுளிக்கிறார்கள்.


Share it if you like it