கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகளையும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
குஜராத்தில் நடந்த கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: இன்று அமுல் நிறுவனம் கால்நடை வளர்ப்பின் அடையாளமாக மாறிவிட்டது. விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது.
சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டில் பல்வேறு பால் நிறுவனங்கள் துவங்கப்பட்டன. ஆனால் அமுல் நிறுவனம் போல் யாரும் கால்நடை பராமரிப்பாளர்களின் அடையாளமாக மாறவில்லை. விவசாயிகளுக்கு உதவி செய்வதே எங்கள் நோக்கம். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் நலனுக்காக எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தின் கிராமங்களில் நடப்பட்ட மரக்கன்று, இன்று பெரிய ஆலமரமாக மாறியுள்ளது. இந்த மரத்தின் கிளைகள் தற்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளன.
நாட்டை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்ற பால்பண்ணைத் தொழில் பெரும் பங்கு வகித்துள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒவ்வொரு பெண்ணின் நிதி நிலைமையை வலுவாக மாற்றுவது முக்கியம். அதனால்தான் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் பணியை பா.ஜ., செய்து வருகிறது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 70 சதவீத பெண்களுக்கு 30 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது: “இரட்டை இன்ஜின் ஆட்சியை முழுமையாக பயன்படுத்தி, பால் உற்பத்தியில், கடந்த 20 ஆண்டுகளாக, குஜராத் முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் உள்ள பால் நிறுவனங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 23 ஆக உயர்ந்துள்ளது. 11 லட்சம் பெண்கள் உட்பட 36 லட்சத்துக்கும் அதிகமானோர் பால் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.