மதுரை மேலூரில் லவ்ஜிகாத் என்கிற பெயரில் சிறுமிக்கு போதை ஊசி செலுத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆர்ப்பட்டம் நடந்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்தவர் துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுமியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த மதீனா என்பவரின் மகன் நாகூர் ஹனிபா காதலிப்பதாகக் கூறியதாகவும், அதற்கு துர்காவின் பெற்றோர் சம்மதிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், காதலர் தினமாக பிப்ரவரி மாதம் 14-ம் தேதி திடீரென துர்காவை காணவில்லை. இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் துர்கா கிடைக்காததால், மறுநாள் காலையில் மேலூர் போலீஸில் புகார் செய்திருக்கிறார் துர்காவின் தாய்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கடந்த 1-ம் தேதி நள்ளிரவு குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த துர்காவை, ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று அவரது வீட்டின் முன்பு வீசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய், உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து துர்காவை மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். ஆனால், துர்காவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரை மேல்சிக்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ம் தேதி துர்கா உயிரிழந்து விட்டார்.
இதையடுத்து, துர்காவுக்கு நீதி கேட்டு அவரது உறவினர்ளும், வி.ஹெச்.பி. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் தும்பைப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி ஹிந்து அமைப்புகள் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், பல்வேறு தரப்பினரும் சிறுமிக்கு நீதிகேட்டு ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்தது. தவிர, சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலானது.
இந்த நிலையில்தான், சிறுமி துர்காவுக்கு நீதி கேட்டு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதேபோல, ஸ்ரீவைகுண்டத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் அப்பகுதிகளில் இருக்கும் ஹிந்து அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
வல்லநாட்டில் நடந்த ஆர்ப்பாட்டம்…
ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்…