அமைச்சரின் ‘பிச்சை’ பேச்சு… அண்ணாமலை கண்டனம்… பணிந்த எ.வ.வேலு… பகிரங்க மன்னிப்பு… பா.ஜ.க. வெற்றி!

அமைச்சரின் ‘பிச்சை’ பேச்சு… அண்ணாமலை கண்டனம்… பணிந்த எ.வ.வேலு… பகிரங்க மன்னிப்பு… பா.ஜ.க. வெற்றி!

Share it if you like it

மதுரை ஐகோர்ட் கிளை கருணாநிதி போட்ட பிச்சை என்று அமைச்சர் வேலு பேசியிருந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு, பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இது பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

மதுரையில் நேற்று இரவு நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி. இது அவர் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியதோடு, பல்வேறு தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, அமைச்சர் எ.வ.வேலுவின் பிச்சை பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களை கொச்சைப்படுத்துவது, தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது. தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் தி.மு.க.வினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை தமிழக பா.ஜ.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று பேசியதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். பொதுக்கூட்டத்தில் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தியது இன்று காலையில் ஒரு செய்தியில் பார்த்த பிறகுதான் தெரியவந்தது. அதன் பிறகு எனக்கு மன உளைச்சலே ஏற்பட்டு விட்டது. பொதுக்கூட்டத்தில் பேசிய தவறான வார்த்தைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐகோர்ட் கிளை அமைந்தது கருணாநிதி அளித்த கொடை என்று சொல்வதற்கு பதிலாக உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் பேசியபோது உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இது பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


Share it if you like it