விதி மீறிய அமைச்சர் சேகர்பாபு… வீடியோ எடுத்த செய்தியாளர்கள்… விரட்டியடித்த போலீஸ்!

விதி மீறிய அமைச்சர் சேகர்பாபு… வீடியோ எடுத்த செய்தியாளர்கள்… விரட்டியடித்த போலீஸ்!

Share it if you like it

அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்ப்பதற்காக விதிகளை மீறிச் சென்ற அமைச்சர் சேகர்பாபுவை வீடியோ எடுத்த செய்தியாளர்களை போலீஸார் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேற்று சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்து விட்டு வந்தனர். இதனிடையே, செந்தில்பாலாஜியை எதிர்வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி சென்னை ஐகோர்ட் முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையடுத்து, மத்திய பாதுகாப்புப் படை விலக்கிக் கொள்ளப்பட்டு, மாநில சிறைத்துறை போலீஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், செந்தில்பாலாஜியை பார்ப்பதற்காக, அமைச்சர் சேகர்பாபு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், சிறைத்துறையின் அனுமதி பெறாமல், அமைச்சர் என்கிற தனது அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளே சென்றார். அமைச்சரைக் கண்ட செய்தியாளர்கள் ஓடோடி வந்து வீடியோ மற்றும் போட்டோ எடுத்தனர்.

இதைப் பார்த்த சேகர்பாபுவுடன் வந்த தி.மு.க.வினர், வீடியோ எடுக்குறாங்க பாருங்க என்று போலீஸாரிடம் கூறினார்கள். இதைத் தொடர்ந்து, வீடியோ எடுத்த செய்தியாளர்களை வீடியோ எடுக்காதீர்கள் என்று போலீஸார் மிரட்டியதோடு, விரட்டி அடித்தனர். விதிகளை மீறி வந்த அமைச்சரை வீடியோ எடுத்த செய்தியாளர்களை போலீஸார் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it