அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் பின்னணியில் நடந்தது என்ன என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்…
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டுவரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவரும், இவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர், போக்குவரத்துத்துறையில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் செந்தில்பாலாஜி வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வானாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்த செந்தில்பாலாஜி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதி.மு.க. இரண்டாக பிளவுபட்ட நிலையில், எடப்பாடி அணியில் இணைந்தாலும், இரு அணிகளும் இணைந்த பிறகு, தினகரன் அணியில் சேர்ந்தார். இந்த சமயத்தில்தான், சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சென்னை, கரூர், திருவண்ணாமலை, கும்பகோணத்தில், செந்தில்பாலாஜிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனை முடிவில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மற்றும் உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, தி.மு.க.வில் இணைந்த செந்தில்பாலாஜி, 2021 தேர்தலில் வெற்றிபெற்று, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரானார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுத்து வழக்கை முடிக்க நினைத்தார். அதன்படி, புகார் கொடுத்தவர்கள் பணம் கிடைத்து விட்டதாகக் கூறவே, செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளக் கோரி ஆணை பிறப்பித்தது.
இதன் பிறகு, லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்குதான் தற்போது செந்தில்பாலாஜிக்கு குடைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.