சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்ப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அரசு தேர்வுத் துறை அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006-ன் படி, 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயமாகும். சிறுபான்மை மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். அதேசமயம், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 2019-ம் ஆண்டு சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் சார்பில், பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடம் எழுவதுதில் இருந்து விலக்கு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2020 – 22 வரையிலான கல்வி ஆண்டு வரை மட்டும் சிறுபான்மை மொழியை தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், 2023-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், எதிர்வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், 2023-ம் கல்வியாண்டிலும் தமிழ் பாடத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஓ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழை கட்டாய பாடமாக்குவதிலிருந்து ஓராண்டுக்கு விலக்களித்து உத்தரவிட்டது. இதையடுத்து, மொழிச் சிறுபான்மை மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விஸக்கு கோரலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து, தி.மு.க. அரசை வசைபாடி வருகின்றனர் நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும். அதாவது, தமிழகத்தில் தமிழை வளர்ப்பதாகக் கூறி, ஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் தி.மு.க. அரசு, உருது, பிரெஞ்ச் உள்ளிட்ட வேற்று மொழிகளை கற்க மட்டும் எப்படி அனுமதி அளிக்கிறது. இதனால், தமிழ் மொழி அழிந்துவிடாதா? ஹிந்தியை கற்றால் மட்டும்தான் அழியுமா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தி.மு.க. அரசின் இத்தகையை இரட்டை வேடத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.