செல்போன் ஆப்கள் மூலம் ரூ.500 கோடி மோசடி: சீனாவுக்கு தொடர்பு? முக்கியக் குற்றவாளி கைது!

செல்போன் ஆப்கள் மூலம் ரூ.500 கோடி மோசடி: சீனாவுக்கு தொடர்பு? முக்கியக் குற்றவாளி கைது!

Share it if you like it

செல்போன் ஆப்கள் மூலம் கடன் வழங்கி, ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டி 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்திருக்கும் நிலையில், அக்கும்பலுக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போதைய கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் கடன் பெறுவது, செல்போன் ஆப்கள் மூலம் கடன் பெறுவது போன்ற நடைமுறைகள் அதிகரித்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு கும்பல் தினசரி போன் செய்து கடன் வேண்டுமா என்று கேட்பது வாடிக்கையாக இருக்கிறது. இப்படி செல்போன் ஆப்களில் கடன் பெறுபவர்கள், கடனை திருப்பிச் செலுத்திய பிறகும், கடன் நிலுவை இருப்பதாகக் கூறி போனில் மிரட்டப்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதோடு, கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை ஆபாசப் படங்களாக சித்தரித்து மிரட்டுவதும் நடந்து வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் அதிகளவில் நடந்து வந்தது. இதையடுத்து, மும்பை மற்றும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில், இதுபோன்ற கடன் கொடுப்பதற்கு 100-க்கும் அதிகமான செல்போன் ஆப்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இக்கும்பலை பொறுத்தவரை செல்போன் ஆப்பில் கடன் கேட்டால், சில நிமிடங்களிலேயே சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். ஆனால், இந்த ஆப்கள் மூலம் கடன் பெறும் பயனாளிகளைப் பற்றிய முக்கியமான தகவல்களை, கடன் கொடுக்கும் கும்பல் சட்டவிரோதமாக திருடி, சீனா மற்றும் ஹாங்காங் சர்வர்ளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

பின்னர், கடன் கொடுத்த கும்பல் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி கடன் பெற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விடுகின்றனர். குறிப்பாக, கடன் பெற்றவரின் புகைப்படங்களை ஆபாசப் படங்களாக சித்தரித்து பயனாளிகளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர். கடன் பெற்றவர்களும் சமூக அந்தஸ்துக்கு பயந்து, அக்கும்பல் கேட்கும் பணத்தை அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு வசூலாகும் பணம், ஹவாலா முறையில் சீனாவிற்கு அனுப்பப்பட்டு, கிரிப்டோ கரன்ஸியாக மாற்றப்படுகிறது.

இது தொடர்பாக மேற்கண்ட மாநிலங்களைச் சேர்ந்த 22 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர்களில் 2 பேர் பெண்கள். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீன பிரஜைகள் சிலருக்காக வேலை செய்வது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் சிலரையும் போலீஸார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதனிடையே, இந்தியாவில் செயல்படும் கடன் வசூலிப்பு கால் சென்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, மேற்கண்ட கால் சென்டர்களை பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சீன பிரஜைகள் இடமாற்றம் செய்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், இதுவரை 500 கோடி ரூபாய் வரை மிரட்டி பறித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேட்டதும் கடன்; ஆபாச படங்களை அனுப்பி ரூ.500 கோடி மோசடி - பின்னணியில் சீன கும்பல்

Share it if you like it