யாருமே செய்யாத சாதனை இது!!

யாருமே செய்யாத சாதனை இது!!

Share it if you like it

யாருமே செய்யாத சாதனை இது!!

உலகமே கொரோனாத் தாக்கத்தால், பாதிக்கப் பட்டு இருந்த போது, நமது நாடு மட்டுமே அதில் இருந்து மீண்டு, பொருளாதாரத்திலும் சரி, தடுப்பூசி மருந்து கண்டு பிடிப்பதிலும் சரி, நிலையான முன்னேற்றத்தைக் கண்டு, 2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 17 ஆம் தேதி அன்று, 200வது கோடி டோஸ் தடுப்பூசியை, மக்களுக்கு செலுத்தி உள்ளது. குறுகிய காலத்தில் நிகழ்ந்த பெரும் சாதனை இது என உலகின் செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ் பாராட்டி இருக்கிறார். நமது நாட்டின் மணிமகுடத்தில்‌ பதிக்கப் பட்ட மற்றும் ஒரு வைரக் கல்லாகவே, உலகளவில் இது பார்க்கப் படுகிறது.

ஏழு கட்டங்கள் :

விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியினால்,  கொரோனாவிற்கான  தடுப்பூசி மருந்து, நமது நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டது. முதல் டோஸ், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, செலுத்தப் பட்டது.

I – 2021 ஆம் ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதங்களில், முன் நிலை களப் பணியாளர்களுக்கு (Frontline Warriors) முன்னுரிமை அளிக்கப் பட்டு, அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப் பட்டது.

II – மார்ச் – ஏப்ரல் மாதங்களில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டது.

III – மே மாத காலத்தில், தனியார் மருத்துவமனைகளில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டது.

IV – ஜூன் மாத காலத்தில் , 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டது.

V – 2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாத காலத்தில், 15 வயது முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும், தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டது.

VI – மார்ச் மாத காலத்தில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டது.

VII – ஏப்ரல் மாதத்தில் இருந்து, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப் பட்டது.

நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பினால்

2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி 50வது கோடி டோஸூம்,

அக்டோபர் 21 அன்று 100வது கோடி டோஸூம்,

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி 150வது கோடி டோஸூம், 

ஜூலை மாதம் 17 ஆம் தேதி 200வது கோடி டோஸூம் செலுத்தப் பட்டது.

2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று, அந்த ஓரு நாள் மட்டும், இரண்டரைக் கோடி டோஸ் தடுப்பூசி, இந்திய மக்களுக்கு செலுத்தப் பட்டது, உலக மக்கள் அனைவராலும் மிக ஆச்சரியமாக பார்க்கப் பட்டது.

ஜனவரி 2021 முதல் தொடங்கப் பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி, முதல் 9 மாதத்தில் 100 கோடி, அடுத்த ஒன்பது மாதத்தில் 100 கோடி என மொத்தம் 18 மாதத்திலேயே, 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டது, உலக அளவில் மிகப் பெரும் சாதனையாக, பலராலும் பேசப்பட்டு வருகின்றது. எனினும் இதற்கு முன்னரே, சீனாவில் 200 கோடி டோஸ் செலுத்தி இருந்தாலும், இந்தியாவைப் போல் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற கருத்து, சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப் படுகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பீடு :

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரான்ஸ் இதுவரை 15 கோடி டோஸ் மட்டுமே, தனது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளது. ரஷ்யா 17 கோடியும், ஜெர்மனி 18 கோடியும், ஜப்பான் 25 கோடியும், அமெரிக்கா 60 கோடி மட்டுமே தடுப்பூசி போட்டு உள்ளது.

அமெரிக்கா மக்கள் தொகையைப் போல மூன்று மடங்கும், ஜப்பானைப் போல் ஏழு மடங்கும், ஜெர்மனியைப் போல் 11 மடங்கும், பிரான்சைப் போல் 14 மடங்கு என இந்தியா தனது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி உள்ளது.

வாரி வழங்கிய இந்தியா :

உலக நாடுகள் பலவற்றிற்கும், நமது நாடு உயிர் காக்கும் தடுப்பூசி மருந்தை, வாரி வழங்கி உள்ளது. “உள்நாட்டில் உற்பத்தி” (Make in India), “உலகிற்காகவும் உற்பத்தி” (Make for World) என்ற தாரக மந்திரத்தை  மையமாகக் கொண்டு, உலக மக்கள் நலன் பெற, நமது நாடு வாரி வழங்கி உள்ளது.

பிரேசில் அதிபர் பொல்சனாரோ (Bolsonaro) தனது ட்விட்டர் பதிவில், ராமாயணத்தில் சஞ்சீவி மலையை அனுமார் தூக்கிக் கொண்டு வரும் படத்தை பதிவிட்டு, இந்தியா பிரேசில் மக்களுக்கு அளித்த மருந்தை அந்த சம்பவத்துடன் ஓப்பிட்டு, நமது நாட்டை வெகுவாக புகழ்ந்து உள்ளார்.

உடனே சான்றிதழ் :

தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும், உடனே அதற்கான சான்றிதழை வழங்குவதிலும், இந்தியா மிகப்பெரும் சாதனையை செய்து உள்ளது. அதற்கென பிரத்தியேகமாக ஓரு தளத்தை உருவாக்கியது.

COWIN (COVID Vaccine Intelligence Network) என்ற தளத்தின் மூலமாக, தடுப்பூசி போட்ட அனைவருக்கும் சான்றிதழை வழங்கியது, மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்தது.

வளர்ந்த நாடுகள் என சொல்லப் படுகின்ற பல நாடுகள், கொரோனா சீற்றத்தால் சிக்கி தவித்த போது, இந்தியா மட்டுமே நமது நாட்டு மக்களுக்கும், வெளி நாட்டு மக்களுக்கும், உயிர் காக்கும் மருந்தை கண்டுபிடித்து, விரைவில் அனைத்து மக்களிடையே, அதனைக் கொண்டு போய் சேர்த்தது.

யாரும், எங்கும் வெளியே செல்ல முடியாமல், வேலை செய்ய முடியாத சூழல் இருந்ததால், வருமானம் இன்றி தவித்த தொழிலாளர்களின் துயர் துடைக்க, திட்டம் ஒரு பக்கம் தீட்டப் பட்டு, அது செயல் படுத்தப் பட்டது, மறுபுறம் உயிர் காக்கும் மருந்தை எல்லோருக்கும் கொடுத்து உதவியது என ஒரே நேரத்தில் அனைத்தையும் சமாளித்து, உலக அளவில் நமது நாடு பெருமையுடன் சாதித்துக் காட்டியது என்றால், அது மிகையல்ல.

இயற்கை சீற்றம், மழை, வெள்ளம் போன்றவற்றை கையாள்வது எப்படி என நமக்கு நிறைய அனுபவம்  உள்ளன.  சுனாமியைக் கூட பார்த்து இருக்கின்றோம். ஆனால், குறுகிய காலத்தில், கொரோனா பரவலைத் தடுத்து, அதனை சமாளித்து, இயல்பு நிலைக்கு திரும்பியது, உலக அளவில் எல்லோராலும் பெருமையாக பாராட்டப் படுகின்றது.

யாரும் செய்யாத சாதனையை நமது நாடு செய்து உள்ளது.

அதனை அனைவருக்கும் சொல்வோம்…

நமது நாட்டின் பெருமையை… உலகிற்கு பறை சாற்றுவோம்…

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it