சித்தராமையாவின் சொந்த மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி !

சித்தராமையாவின் சொந்த மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி !

Share it if you like it

மைசூரில் நாளை நடக்கும் பா.ஜ.க – ம.ஜ.த., கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கர்நாடகாவில் பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, கலபுரகி, ஷிவமொகாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரம் செய்தார். ஆனால், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை.

இந்நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் செல்வாக்கு உள்ள மைசூரில் நாளை கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக் கூட்டம் நடக்கிறது.

நகரின் மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர், மாண்டியா ம.ஜ.த., வேட்பாளர் குமாரசாமி, சாம்ராஜ்நகர் பா.ஜ., வேட்பாளர் பால்ராஜ், ஹாசன் ம.ஜ.த., வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் முதன் முறையாக ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.

பழைய மைசூரு மீது கண் வைத்து, மைசூரில் பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது. இரண்டு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் திரட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று மைசூரு வந்துவிட்டன. விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் வருவதால், நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது.

முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டத்தில் மோடி பிரசாரம் செய்வதால், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சம், காங்கிரஸ் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Share it if you like it