ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘நகர்ப்புற போரும், மக்களின் பாதுகாப்பும் என்கிற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசியபோது, தேவையில்லாமல் ஐம்மு காஷ்மீர் விவகாரத்தை கிளப்பினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரக குழு ஆலோசகர் மதுசூதன், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் தரும் நாடு பாகிஸ்தான் என்பதை உலக நாடுகள் நன்கு அறியும். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். ‘மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். தவிர, உலகில் எந்த மூலையில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும், அதில் ஏதாவது ஒரு வகையில் பாகிஸ்தான் மூல காரணமாக இருக்கும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக செயல்படுவதால், சிறுபான்மையினர் அச்சத்திலேயே வாழ வேண்டிய சூழல் நிலவுகிறது. இதை மறைப்பதற்காக ஐ.நா.வில் அடிக்கடி காஷ்மீர் பிரச்னை பற்றி பேசுகிறது பாகிஸ்தான். ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் என்றுமே இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவிற்குச் சொந்தமானதுதான். ஆகவே, பாகிஸ்தான் படைகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.