வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜட் பட் மாநிலங்களவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் ;
பணியின்போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள்,உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், காணாமல்போன வீரர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வாரிசுகளுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. பள்ளி செல்வதற்கான பேருந்து கட்டணம், ரயில் கட்டணம் வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க ஓராண்டுக்கு ரூ.2,000, சீரூடைக்கு ரூ.700 அளிக்கப்படுகிறது.
போரில் உயிரிழந்த வீரர்களின் மனைவிகள், போரில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சுகாதார திட்டத்தின் கீழ் இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மத்திய பெட்ரோலிய துறை சார்பில் வழங்கப்படும் பெட்ரோல் நிலையங்கள், சமையல் காஸ் விநியோகஸ்தர் உரிமங்களில் 8 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், மத்திய நிதித் துறை, பொருளாதார விவகார துறையின் காலிப் பணியிடங்களில் குரூப் சி பதவிகளில் 14.5 சதவீதம், குரூப் டி காலிப் பணியிடங்களில் 24.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பணியின்போது உயிரிழந்த ராணுவ அதிகாரிகள், வீரர்களுக்குரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நிவாரண நிதியுதவி வழங்கப்படுகிறது. ராணுவ அறக்கட்டளையில் இருந்து ரூ.8 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும். குடும்பத்தினருக்கு முழுஓய்வூதியம் வழங்கப்படும். மாநில அரசுகள் சார்பிலும் இழப்பீடு அளிக்கப்படும்.
வாரிசுகளின் உயர்நிலை கல்விக்காக ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும், பெண் வாரிசுகளின் திருமணத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவிகளின் உயர் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
வீரமரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் 42 எம்.பி.பி.எஸ். இடங்கள், 3 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.