ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி வேண்டுகோள்!

ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி வேண்டுகோள்!

Share it if you like it

ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இதையடுத்து, இருநாட்டு பிரதமர்களும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கும் இடையே உள்ள விரிவான பொருளாதார ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் பணி செய்கிறோம். இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான தூதரகக் கூட்டுறவில், பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கிய அங்கமாகும். நாங்கள் இன்று இந்தோ -பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து விவாதித்தோம்.

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் தாக்கப்படும் செய்திகளை நான் பார்த்தேன். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸிடம் நான் தெரிவித்தேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் குவாட் அமைப்பில் உறுப்பு நாடுகள். வரும் மே மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு என்னை அழைத்தற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்” என்று பிரதமர் மோடி பேசினார்.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பேசும் போது இவ்வாறு கூறினார் : “நாங்கள் இருவரும் ஆஸ்திரேலியா நடத்தும் மலபார் பயிற்சி குறித்து விவாதித்தோம். நானும் பிரதமர் மோடியும் எங்களுடைய லட்சியமான ஒருங்கிணைந்த கூட்டுப் பொருளாதார ஒப்பந்தத்தை கூடிய விரைவில் முடிப்பது என முடிவெடுத்தோம். நாங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.


Share it if you like it