பிரதமர் வருகை வரலாறு காணாத பாதுகாப்பு!

பிரதமர் வருகை வரலாறு காணாத பாதுகாப்பு!

Share it if you like it

சென்னை வரும் பிரதமரின் வருகையையொட்டி 22,000 போலீஸாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ; பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 08.04.2023 அன்று சென்னை, விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கவும், சென்னை, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கவும், மெரினா அருகில், விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும், பல்லாவரம், அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் சென்னைக்கு வருகை தர இருக்கிறார்.

அதன்பேரில், பாரத பிரதமர் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டோம்.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை, விமான நிலையம், சென்னை, எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், 08.04.2023 அன்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.


Share it if you like it