பா.ஜ.க.வின் 44-வது நிறுவன தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பா.ஜ.க. தொண்டர்களிடம் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் ;
சமூகநீதி பற்றி எதிர்க்கட்சிகள் பேச மட்டுமே செய்கின்றன. ஆனால், பா.ஜ.க. மட்டுமே ஒவ்வொரு இந்தியனுக்கும் உதவிட பாடுபட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. 2024 தேர்தலில் பா.ஜ.க.வை யாராலும் தோற்கடிக்க முடியாது என மக்கள் ஏற்கெனவே சொல்லத் தொடங்கிவிட்டனர். இது உண்மைதான். என்றாலும் பா.ஜ.க தொண்டர்களாகிய நாம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்தையும் வெல்ல வேண்டும்.
எதிர்க்கட்சிகள் மிகவும் அவநம்பிக்கை அடைந்துள்ளன. ‘மோடி, உங்கள் கல்லறை தோண்டப்படும்’ என்ற முழக்கங்களை அவை மீண்டும் எழுப்புகின்றன. நாட்டில் நிலவும் ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சவால்களுக்கு எதிராக போராடுவதிலும் பா.ஜ.க உறுதியாக உள்ளது.
தற்போது இந்தியா அனுமனை போன்று சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் தயார் நிலையில் உள்ளது. பக்தி, வலிமை மற்றும் தைரியத்திற்காக போற்றப்படும் அனுமனிடம் இருந்து பாஜக உத்வேகம் பெறுகிறது.
அனுமனைப் போல்..
அனுமனைப் போல நாமும் சில சமயங்களில் கடினமாக இருந்திருக்கலாம். ஆனால் நாம் இரக்கம் உள்ளவர்களாகவும் அடக்கமாகவும் இருக்கிறோம். அனுமனைப் போன்ற உறுதியும் ‘செய்ய முடியும்’ என்ற மனப்பான்மையும் பா.ஜ.கவுக்கு உள்ளது.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறுகிய சிந்தனை கொண்டவையாக உள்ளன. ஊழல், சாதிவெறி மற்றும் குடும்ப ஆட்சியில் அவை சிக்கித் தவிக்கின்றன. ஆனால் அவ்வாறு இல்லாமல் மிகப்பெரிய கனவுகளை கொண்டிருப்பதும் அக்கனவுகள் நிறைவேற பாடுபடுவதும் பா.ஜ.கவின் கலாச்சாரமாக உள்ளது.
2014-ல் பாஜக முதல் முறையாக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த போது, 800 ஆண்டு கால அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய அரசியலில் மாற்றத்தை கொண்டு வந்தது.
பா.ஜ.க எப்போதும் தனது கொள்கையில் தேசத்தை முதன்மையாக வைத்துள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரமளிக்க பாடுபட்டுள்ளது. ஒவ்வொருவரின் கரம், ஒவ்வொருவரின் ஆதரவு, ஒவ்வொருவரின் முயற்சி என்பதில் பா.ஜ.க நம்பிக்கை கொண்டுள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 6 முதல் 14 வரை திட்டமிடப்பட்டுள்ள ஒரு வார கால சமூக நல்லிணக்க பிரச்சாரத்தில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதுடன் மட்டும் நாம் நின்றுவிடக் கூடாது. கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஜனசங்க காலத்தில் இருந்து செலுத்தி வரும் அதே கடின உழைப்புடன் நாம் ஒவ்வொரு தேர்தலிலும் போரிட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.