மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இருந்த தடைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
பாரதம் முழுவதும் 112 மாவட்டங்களில் ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்ற திட்டம் 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி மாவட்டங்கள்தோறும் மத்திய அரசின் நலத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தை செயல்படுத்தும் கலெக்டர்கள் மற்றும் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி 22-ம் தேதி கலந்துரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இத்திட்டத்தால் மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். இத்தனை காலமும் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த அனைத்தும் தகர்க்கப்பட்டிருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
மக்கள் சேவைகள் மற்றும் வசதிகளில் 100 சதவிகிதம் என்கிற சமநிலையை எட்டுவதாக நமது இலக்கு இருக்க வேண்டும். இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளால் மக்களுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கும் இடையே இருந்த தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றும் ஒன்றும் 2 என்பது 11 ஆக மாறியிருக்கிறது. இதுதான் கூட்டு முயற்சியின் வெற்றி, வலிமை. பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள் இணைந்து 142 மாவட்டங்களின் பட்டியலை தயாரித்திருக்கின்றன. ஆர்வமுள்ள மாவட்டங்களைப் போல இந்த 142 மாவட்டங்களிலும் திட்டங்களை ஒருமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.