பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பதன் மூலம், சீனாவுக்கு செக் வைத்திருக்கிறது இந்தியா என்பதுதான் ஹைலைட்!
நிலம், நீர், வான் ஆகிய மூன்று நிலைகளில் இருந்தும் ஏவக்கூடிய வகையிலான, ஒலியைவிட வேகத்தில் பறக்கும் திறன் படைத்த சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளை ரஷ்ய கூட்டமைப்புடன் தயாரித்து வருகிறது இந்தியா. இந்த ஏவுகணை வெடிபொருட்களை தாங்கிச் சென்று 400 கி.மீ. சுற்றளவுக்கு தாக்கும் திறன் படைத்தது. குறிப்பாக, ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை நமது நாட்டின் முப்படைகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. இதுதான் பாகிஸ்தான், சீனா போன்ற நமது எதிரி நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேசமயம், வியட்னாம் நாட்டை ஒட்டியுள்ள தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆகவே, தென் சீனக் கடல் வழியாக மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு பாதுகாப்பாக, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுடனான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்க முடிவு செய்தது. அதன்படி, நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுதான் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது, நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலுள்ள சில துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மேலும், மேற்கண்ட இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான், சீனாவுக்கு அருகிலேயே பிரம்மோஸ் ஏவுகணையை நிலை நிறுத்த, இந்தியா காய் நகர்த்தி இருக்கிறது. இதேபோல, வியட்னாம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பிரம்மோஸ் ஏவுகணைகளை விரைவில் வாங்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.