தி.மு.க. ஆதரவாளரும், சர்ச்சை நாயகனும், கிறிஸ்தவ மத போதகருமான மோகன் சி.லாசரஸ், மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் பேசியிருப்பது மருத்துவ வல்லுனர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி என்ற கிராமத்தில் இயேசு விடுவிக்கிறார் என்கிற பெயரில் சபையை நடத்தி வருபவர் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ். தி.மு.க. ஆதரவாளரான இவர், இந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால், இந்துக்களுக்கும், இந்து மதத்துக்கும் ஆதரவாகவும், அரணாகவும் இருக்கும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கக் கூடாது என்று தனது பிரசங்கத்தில் பகிரங்கமாகவே கூறினார். தவிர, பிரதமர் மோடியையும் தரக்குறைவாக விமர்சித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்துக் கடவுள்களை எல்லாம் சாத்தான்கள் என்று கூறியதோடு, இந்துக் கோயில்களை எல்லாம் இடிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இதனால், இந்துக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்து பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டவர்.
இந்த நிலையில்தான், தடுப்பூசிக்கு எதிராக மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் சர்ச்சையான கருத்தைக் கூறி, மருத்துவ வல்லுனர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் மோகன் சி.லாசரஸ். அதாவது, தனது பிரசங்கத்தில் பேசும் மோகன் சி.லாசரஸ், தடுப்பூசி, பூஸ்டர் ஊசி எல்லாம் ஏமாற்று வேலை. கார்ப்பரேட் கம்பெனிகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, ஆட்சியாளர்கள் செய்யும் தகிடுதத்தம் வேலை. இப்போது ஒரு பூஸ்டர் ஊசி என்பார்கள். பிறகு, மாதத்திற்கு ஒன்று என்பார்கள். கடையில் சர்க்கரை வியாதிக்கு போடும் இன்சுலின் போல தினமும் ஒரு பூஸ்டர் ஊசி போட வேண்டும் என்பார்கள். ஆகவே, யாரும் தடுப்பூசி போட வேண்டாம். இயேசுவை நம்புங்கள். அவர் உங்களை எல்லாம் காப்பாற்றுவார் என்று கூறியிருக்கிறார்.
இதுதான் மருத்துவ வல்லுனர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் நடத்திய பிரசங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், நீங்கள் எவ்வளவு காணிக்கை கொடுக்கிறீர்களோ, அதற்குத் தகுந்த பலன்தான் கிடைக்கும். ஆகவே, காணிக்கையை தாராளமாகக் கொடுங்கள் என்று ஒரு வியாபாரியைப் போல, கடவுளின் அருளை பெற காணிக்கை கொடுக்கும்படி கேட்டவர் மோகன் சி.லாசரஸ். இவர் மருத்துவம் பொய் என்கிற ரீதியில் பேசியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது என்று கிண்டல் செய்கிறார்கள் மருத்துவத் துறையினர்.