அல்கொய்தா தொடர்பு: 4 பேர் அதிரடி கைது!

அல்கொய்தா தொடர்பு: 4 பேர் அதிரடி கைது!

Share it if you like it

மேற்கு வங்கத்தில் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 4 பேரை மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும், மேற்குவங்க போலீஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தடை செய்யப்பட்ட அல்கொய்தா, சிமி, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வருவதாக, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுப்பிரிவு போலீஸார், மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கை செய்தன. இதையடுத்து, பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும், மாநில சிறப்பு அதிரடிப் படை போலீஸாரும் மாநிலம் முழுவதும் விசாரணையில் இறங்கினர். அப்போது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக மேற்குவங்கத்தைச் சேர்ந்த பராசத்தில் உள்ள சஷோன் பகுதியில் வசித்து வந்த அப்துர் ரகிப் சர்க்கார், காசி அஹசன் உல்லா ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 17 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ.) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதில், முக்கியமானவர்களாகக் கருதப்படும் சமீர் ஹொசைன் ஷேக் மற்றும் சதாம் ஹொசைன் கான் ஆகியோர் மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு தப்பிச் சென்று விட்டனர். இதில் சமீர் ஹொசைன் ஷேக் டைமண்ட் ஹார்பர் பகுதியிலும், சதாம் ஹொசைன் கான் நிர்மல் நகரிலும் வசித்து வருவதாக மாநில சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மும்பை விரைந்த மேற்குவங்க மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார், சதாம், சமீர் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த இருவரை மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் நேற்று கைது செய்திருக்கிறார்கள். மால்டா மாவட்டம் கசோல் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த தயாப் அன்சாரி மற்றும் மன்சூர் அலி ஆகியோர் 2.98 லட்சம் ரூபாய் போலி கரன்ஸி வைத்திருக்கிறார்கள். இத்தகவலறிந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார், இருவரையும் கைது செய்ததோடு, போலி ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். ஆக மொத்தத்தில் மேற்குவங்கத்தில் சமூக விரோதிகளின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


Share it if you like it