தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜிப்ரான், அண்மையில் ரிலீஸ் ஆன குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்து இருந்தார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறிய ஜிப்ரான், அதோடு தன் பெயரையும் மாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “இஸ்லாம் பாலோ பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் கடைசி மூன்று, நான்கு வருடங்களாக மறுபடியும் ஹிந்துவாக மாறிவிட்டேன். சட்டப்பூர்வமாகவும் எல்லா மாற்றங்களும் செய்துவிட்டேன் என கூறினார். இதுவரை தன்னுடைய படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த அவர், குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என தன்னுடைய புது பெயரை போட்டிருந்தார். பெயர் மாற்றம் குறித்தும் அந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் ஜிப்ரான்.
அதன்படி, குரங்கு பெடல் படம் எனக்கு மனதுக்கு நெருக்கமான படமாக இருந்தது. அதனால் இந்த படத்தில் இருந்து அப்பா பெயரையும் என்னுடைய பெயருடன் சேர்த்துவிடலாம் என முடிவு செய்தேன். என்னுடைய தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என பொருள். வாகை சூடவா படம் நான் பிடிச்சு பண்ண படம், அதேபோன்ற ஒரு உணர்வோடு குரங்கு பெடல் படமும் இசையமைத்தேன். அதனால் இப்படத்தில் இருந்து என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தேன். இனி நான் பணியாற்றும் படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்றே பயன்படுத்த உள்ளேன் என அவர் கூறி இருக்கிறார்.