மோடி சிறந்த தலைவர்: காதர் மொய்தீன் புகழாரம்!

மோடி சிறந்த தலைவர்: காதர் மொய்தீன் புகழாரம்!

Share it if you like it

பிரதமர் மோடி சிறந்த தலைவர். மோடியால்தான் ஜி20 மாநாட்டு தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது என்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தலைவர் சுல்தான் தலைமையில் கும்பகோணத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்றார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், “இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் பவள விழாவை எதிர்வரும் 20-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழாவில், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து சென்னையில் நடைபெறும் மாநாட்டில் முடிவெடுக்கப்படும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாரா என்பது குறித்து நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 2024 தேர்தலில் தேசிய அளவில் 3-வது அணி அமைய வாய்ப்பிருக்கிறது.

ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிப்பது நம் நாட்டுக்குக் கிடைத்த தனி பெருமையாகும். இந்த மாநாடு மூலம் இந்தியாவுக்கு பேரும் புகழும் கிடைக்கும். மேலும், இந்தியாவுக்கு மிகப்பெரிய அந்தஸ்தும் கிடைக்கும். சிறந்த தலைவர்தான் நம் தேசத்தின் பிரதமராக இருக்க இயலும். நாட்டு மக்கள் விரும்பிதான் மோடியை பிரதமராக்கி இருக்கிறார்ள். மோடியை சிறந்தவர் என்று கூறுவதற்கு நான் உடன்படத்தான் செய்கிறேன். அவரது கொள்கையில் சில மாறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். இதன் காரணமாக, அவரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயற்கைதான். ஜி20 மாநாட்டில் மோடியை முன்னிலைப்படுத்தித்தான் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டிற்கு மோடியின் காலத்தில்தான் இத்தகைய பெருமை கிடைத்திருக்கிறது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், இந்தியாவில் உள்ள சமூக நீதியை ஏற்றுக்கொண்டுள்ள கட்சிகள், மதவாதத்தை புறந்தள்ளும் கட்சிகள், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாரத பிரதமர் மோடியை புகழ்ந்திருப்பது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it