தமிழக பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம். தற்போது பா.ஜ.க. சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம், அந்திமான் நிக்கோபார், டையூ டாமன் ஆகியவற்றின் சிறுபான்மைப் பிரிவு பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். பா.ஜ.க.வுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டிருக்கும் இவர் மீது பலமுறை தாக்குதல் முயற்சி நடந்திருப்பதோடு, சிலமுறை தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கிறார். விரைவில் தமிழகம் முழுவதும் அண்ணாமலை பிரசார நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அப்பயணத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு சார்பில் வாகனத்தை ஏற்பாடு செய்து, நேற்று அவ்வாகனத்தில் அண்ணாமலையை கையெழுத்திடவும் செய்தார்.
அதேசமயம், மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி, தமிழகம் முழுவதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கோஷம் எழுப்பியதோடு, அவரை தாக்கவும் முயன்றிருக்கிறார்கள். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். அதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. ஆகவே, அனைவரும் கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அல்லாஹூ அக்பர் என்று கோஷமிட்டபடியே கலைந்து சென்றனர்.