இந்தியா மீது அவதூறு பரப்பும் சர்வதேச ஊடகங்களை, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார் :
கிட்டத்தட்ட 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், பொது மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவது சவாலானது ஆனால் அதையும் மீறி, 16 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 6 மடங்கு ஆகும். தினமும் 13 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் சவாலான பணிகளை இந்தியா செய்து வருகிறது. இதனை அறியாமல் ஊடகங்கள் தேவையில்லாமல் விமர்சிக்கின்றன.
நானும் சக வீரர்களும் ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க பல முறை இந்தியா சென்றுள்ளோம். இப்படி இந்தியாவை பல ஆண்டுகளாக கூர்ந்து கவனித்தவன் என்ற முறையில் தற்போது மக்கள் படும் வேதனை, ஊடகங்களின் தவறான விமர்சனத்தை பார்க்கும் போது என் இதயம் ரத்தம் சிந்துகிறது.
தமிழகத்தை ஆன்மிக பூமியாக கருதுகிறேன். பல்வேறு கலாசாரம் கொண்ட பெரிய நாட்டை வழி நடத்தும் இந்திய தலைவர்கள், அரசு அதிகாரிகள் மீது மரியாதை வைத்துள்ளேன். பத்திரிகைளில் வந்த செய்திகள் அடிப்படையில் பார்த்தால், இவற்றை சாதாரணமாக எடை போடாதீர்கள். வீணாக விமர்சிக்காதீர்கள். இவ்வாறு ஹைடன் எழுதியுள்ளார்.