நாகலாந்தில் பாறாங்கல் உருண்டு விழுந்ததில், கார் தூள் தூளாக நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் மனதை பதைபதைக்க வைத்திருக்கிறது.
நாகலாந்து மாநிலம் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில், இப்பகுதியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலை 29-ல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
அப்போது, பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு வரிசையில் நின்ற கார்கள் மீது விழுந்தன. இதில் 2 கார்கள் முற்றிலுமாக நொறுங்கின. மற்றொரு கார் பலத்த சேதமடைந்தது. இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்கள் யார் என்பது தெரியவில்லை. ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நொறுங்கிச் சிதறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு பிரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “திமாபூர் மற்றும் கோஹிமா இடையே தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் 2 பேர் பலியாகி இருப்பதோடு, 3 பேர் பலத்த காயமடைந்திருக்கிறார்கள். இந்த இடம் எப்போதும் “பகலா பஹார்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு பெயர் பெற்றது. காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.