பனை மரத்தின் உச்சியில் மட்டையான போதை ஆசாமி… படாதபாடுபட்டு மீட்பு… நாமக்கல்லில் ருசிகர சம்பவம்!

பனை மரத்தின் உச்சியில் மட்டையான போதை ஆசாமி… படாதபாடுபட்டு மீட்பு… நாமக்கல்லில் ருசிகர சம்பவம்!

Share it if you like it

மது போதையில் பனை மரத்தில் ஏறி, மட்டையான குடிமகனை, தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொள்ளாச்சி அருகேயுள்ள செமனாம்பதி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் லட்சுமணன். 45 வயதாகும் இவர், ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் வேலைகளை செய்துவருகிறார். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது அருந்திவிட்டு, ஆங்காங்கே தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த சூழலில், இன்று காலை வேலையை முடித்துவிட்டு, கூலிப் பணத்தை வாங்கிக் கொண்டு, டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தி இருக்கிறார். மேலும், இன்னொரு குவார்ட்டர் பாட்டில் மதுவை வாங்கி, இடுப்பில் சொருக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

மதியம் 2 மணியளவில் வால்பாறை சாலையிலுள்ள ஆவல் சின்னம்பாளையம் ஜமீன் கோட்டாபட்டி பிரிவு அருகே வந்திருக்கிறார். அப்போது, அங்கு சுமார் 100 அடி உயரமுள்ள பனை மரம் இருந்திருக்கிறது. மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மது போதையில் விறுவிறுவென அந்தப் பனை மரத்தில் ஏறி இருக்கிறார். பிறகு, தான் கையோடு கொண்டு சென்றிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து குடித்திருக்கிறார். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில், பனை மரத்தின் உச்சியிலேயே மட்டையாகி விட்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், உச்சியில் இருக்கும் லட்சுமணன் தவறி கீழே விழுந்து விடாமல் இருக்க, மரத்தைச் சுற்றிலும் வலையை விரித்து பிடித்துக் கொண்டனர். பிறகு, தீயணைப்பு வீரர் ஒருவர், பனை மரத்தில் ஏறினார். முதலில், லட்சுணனை கயிறு கட்டி இறக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் கருதினர். ஆனால், முழு போதையில் இருக்கும் அவரை, கயிறு கட்டி இறக்குவது இயலாத காரியம் என்கிற முடிவுக்கு வந்தனர்.

இதையடுத்து, மாற்று வழியைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அருகில் கிரேன் வைத்து வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து, கிரேன் உதவியுடன் போதை ஆசாமி லட்சுமணனை மீட்டனர். இதனிடையே, போதை ஆசாமி ஒருவர் 100 அடி உயரமுள்ள பனை மரத்தின் உச்சியில் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனால், இதைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Share it if you like it