டிக்கெட் இலவசம்தான்… ஆனா ஃபைன் ரூ.100!

டிக்கெட் இலவசம்தான்… ஆனா ஃபைன் ரூ.100!

Share it if you like it

அரசு நகரப் பேருந்துகளில், பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டிக்கெட் இல்லாத பெண் பயணிக்கு டிக்கெட் பரிசோதகர் ஒருவர் 100 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறி சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி, தி..மு.க. ஆட்சிக்கு வந்து, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, இலவச பயணத்துக்கான டிக்கெட் பெண்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இலவச பயண டிக்கெட்டை பெற்று பெண்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், அரசு நகரப் பேருந்தில் இலவசமாக பயணித்த பெண்ணுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி இருக்கிறார் டிக்கெட் பரிசோதகர் ஒருவர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில்தான் இப்படியொரு ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, சேலத்திலிருந்து ராசிபுரத்துக்கு ஆர்.12 என்கிற எண்ணுடைய பேருந்து வந்திருக்கிறது. இப்பேருந்தில் சித்ரா என்பவர் பயணம் செய்திருக்கிறார். பஸ் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது, புதிய பஸ் நிலையத்தை வந்தடையும் பேருந்துகள் அனைத்திலும் பயணம் செய்யும் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர்கள், சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த வகையில், ஆர்.12 பஸ்ஸில் வந்த பயணிகளிடமும் சோதனை செய்தனர். இந்த பஸ்ஸில் வந்த சித்ராவிடம் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டை கேட்டிருக்கிறார். சித்ராவும் கண்டக்டர் தனக்கு கொடுத்த இலவச பயண டிக்கெட்டை தேடிப்பார்த்திருக்கிறார். ஆனால், டிக்கெட்டை காணவில்லை. ஆகவே, டிக்கெட்டை காணவில்லை என்று டிக்கெட் பரிசோதகர்களிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு டிக்கெட் பரிசோதகரோ, அப்படியானால் 100 ரூபாய் ஃபைனை எடு என்று கேட்டிருக்கிறார். இதனால் ஷாக்கான சித்ரா, அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்தானே என்று கேட்டிருக்கிறார். ஆனால், இதை ஏற்க மறுத்த டிக்கெட் பரிசோதகர், 100 ரூபாய் அபராதத்தைக் கேட்டு வற்புறுத்தி இருக்கிறார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், டிக்கெட் பரிசோதகரை சூழ்ந்து கொண்டு, பெண்களுக்கு இலவச பயணம்தானே. டிக்கெட் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, துளைத்து எடுத்து விட்டனர்.

இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்து எஸ்கேப்பாகி விட்டார். அதேசமயம், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பெண்கள் முதல் அனைவரும் சிரித்து சிரித்து வயிறு வலித்துப் போகிறார்களாம். இதுதான் திராவிட மாடல் டிக்கெட் பரிசோதனையோ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it