சேர்மன் தேர்தலில் தனக்கு வாக்காளிக்காததால் தீபாவளி தினத்தன்று, சுயேட்சை கவுன்சிலர்களின் கணவர்களை தாக்கிய தி.மு.க. துணை சேர்மனை சுயேட்சை பெண் கவுன்சிலர் ஒருவர் அடிக்கப் பாய்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சேர்மனாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த நளினி. துணை சேர்மனாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த கார்த்திகேயன். இந்த சூழலில், நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் நளினி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய சுயேட்சை கவுன்சிலர் சினேகா, கடந்த 23-ம் தேதி துணிக்கடையில் இருந்த எனது கணவரை தி.மு.க.வினர் சிலர் தாக்கி இருக்கிறார்கள். இது துணை சேர்மன் கார்த்திகேயன் தூண்டுதலின் பேரில்தான் நடந்திருக்கிறது. காரணமாக, சேர்மன் பதவிக்கு போட்டியிட்டபோது, அவருக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை என்கிற கோவத்தில் ஆட்களை ஏவிவிட்டு தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று கூறியபடியே, காலில் இருந்த செருப்பைக் கழற்றியபடியே, துணை சேர்மன் கார்த்திகேயனை அடிக்கப் பாய்ந்தார்.
சினேகாவை, அருகிலிருந்த பெண் கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, மற்ற சுயேட்சை கவுன்சிலர்களான ராதா, தாமரைச்செல்வி ஆகியோரும், தங்களது கணவரையும் இதேபோல தாக்கியதாகக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, சேர்மன் நளினி இறங்கி வந்து, பெண் கவுன்சிலர்கள் சினேகா, ராதா, தாமரைச்செல்வி ஆகியோரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், சுயேட்சைக் கவுன்சிலர்கள் சமாதானமடையாமல் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனர். இதையடுத்து, கூட்டம் நிறைவுபெறுவதாக சேர்மன் நளினி அறிவித்தார். அப்படி இருந்தும், சுயேட்சை பெண் கவுன்சிலர் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். பின்னர், போலீஸார் வரவழைக்கப்பட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருச்செங்கோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.