பெண்ணின் உயிரை பறித்த திராவிட மாடல் தண்ணீர் தொட்டி!

பெண்ணின் உயிரை பறித்த திராவிட மாடல் தண்ணீர் தொட்டி!

Share it if you like it

நாமக்கல்லில் திராவிட மாடல் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிர் பரிதாபமாக பறிபோயிருக்கிறது.

2021 தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் இல்லாத நல்லாட்சியாக இருக்கும் என்றும், டெவலப்மென்ட், டெவலப்மென்ட், டெவலப்மென்ட்தான் தனது நோக்கம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எல்லாமே தலைகீழாகத்தான் நடந்து வருகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இருக்கும் தி.மு.க.வினர், கான்ட்ராக்டர்களிடம் கறாராக கமிஷனை கறந்து கலெக்ஷனை பார்க்கிறார்கள். மேலும், கான்ட்ராக்ட்களை தாங்களே எடுத்து கரெப்ஷனிலும் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில், ஊழலால் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்து ஒரு பெண்ணின் உயிரை பறித்திருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாரைக்கிணறு ஊராட்சியைச் சேர்ந்தது பெரியகிணறு கிராமம். இங்கு கடந்த 20 தினங்களுக்கு முன்பு, ஊராக வளர்ச்சித்துறை சார்பில், 7.8 அடி உயரத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா கடந்தவாரம் நடந்தது. இந்த கான்ட்ராக்டை எடுத்து தண்ணீர் தொட்டி கட்டியது தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ரம்யாவின் கணவர் முருகன். தண்ணீர் தொட்டியின் உள்ளே மட்டும் சிமென்ட் பூச்சு பூசியவர்கள், வெளிப்புறம் பூசாமல் விட்டு விட்டார்கள். இதனிடையே, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆகவே, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக, அந்த தண்ணீர் தொட்டியில் நீரை நிரப்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு, தண்ணீர் பிடிப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த 55 வயதான பாப்பாத்தியும், சுப்புலட்சுமியும் சென்றிருக்கிறார்கள். அப்போது, திடீரென தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதில், பாப்பாத்தி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்புலட்சுமி லேசான காயமடைந்தார். உடனே, அக்கம்பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், சுப்புலட்சுமியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தரமற்ற கட்டுமானம்தான் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீஸார், தி.மு.க.வைச் சேர்ந்த கான்ட்ராக்ட்டர் முருகனை கைது செய்தனர். தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் ஒருவர் கான்ட்ராக்டர்களிடம் 3 சதவிகிதம் கமிஷன் கேட்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தி.மு.க. கான்ட்ராக்டர் தரமில்லாமல் கட்டிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து பெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it