பா.ஜ.க. நிர்வாகி கார், பைக் எரிப்பு!

பா.ஜ.க. நிர்வாகி கார், பைக் எரிப்பு!

Share it if you like it

தமிழகத்தில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் கட்சிப் பிரமுகர்களை குறிவைத்து பெட்ரோல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல்லில் பா.ஜ.க. நிர்வாகியின் கார் மற்றும் பைக் எரிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மீது, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத பயிற்சி அளித்தல், நாட்டுக்கு எதிராக சதித் திட்டங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில், நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் லோக்கல் போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் வயர்லெஸ் கருவிகள், முக்கிய ஆவணங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக, மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், இதற்கெல்லாம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுதான் காரணம் என்று கருதி, பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக அந்த குண்டுகள் வெடிக்காததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல, கோவை ஒப்பனக்காரவீதியிலுள்ள பா.ஜ.க. பிரமுகருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், ஜவுளிக் கடையில் இருந்த துணிகளில் தீப்பற்றி எரிந்தது. எனினும், பெருத்த சேதம் இல்லாமல் தீ அணைக்கப்பட்டு விட்டது. தவிர, நகரின் பல்வேறு பகுதிகளிலும் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

மேலும், கோவை மாவட்ட ஹிந்து முன்னணி செயற்குழு உறுப்பினர், குனியமுத்துார் முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்த தியாகுவின் காருக்கு நேற்று மதியம் மர்ம நபர் தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகர் தட்சிணாமூர்த்தியின் பர்னிச்சர் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உடற்பயிற்சி பிரிவு மாநில செயலாளரும், காங்கேயம் ரோடு ஜெய்நகர் 5-வது வீதியில் வசிக்கும் பிரபுவின் கார் மீதும் ஜன்னல் மீதும் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் காரமடை ரோட்டில் பழைய கோர்ட் கட்டடம் எதிரே இருக்கும் பா.ஜ.க. பிரமுகருக்குச் சொந்தமான பிளைவுட் கடை மற்றும் குடோன் மீது 4 பெட்ரோல் பாக்கெட்டுகள், 2 பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பிளைவுட்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதேபோல, பாரதிநகர் எதிரே உள்ள பா.ஜ.க. பிரமுகருக்குச் சொந்தமான பிளைவுட் கடையிலும், பெட்ரோல் பாக்கெட்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். தவிர, பொள்ளாச்சி குமரன் நகர் பழனியப்பா லேஅவுட்டைச் சேர்ந்த, பா.ஜ.க. அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலாளர் பொன்ராஜின் கார், குமரன் நகர் இரண்டாவது லேஅவுட்டைச் சேர்ந்த ஹிந்து முன்னணி உறுப்பினர் சரவணக்குமாரின் 2 ஆட்டோக்கள் ஆகியவற்றை நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோடாரியால் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும், குமரன் நகரைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சிவக்குமாரின் காரை சேதப்படுத்தியதுடன், 5-க்கும் மேற்பட்ட டீசல் பாக்கெட்டுகளை வீசி தீவைக்க முயன்றதும் தெரியவந்தது. தவிர, என்.ஜி.எம். நகரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வெள்ளிங்கிரியின் சரக்கு ஆட்டோவை சுற்றியும் டீசல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், திண்டுக்கல்லில் பா.ஜ.க. பிரமுகரின் கார், பைக்கை தீவைத்து எரித்திருக்கிறார்கள். திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பால்ராஜ். பா.ஜ.க. மேற்கு மாநகரத் தலைவராக இருந்து வருகிறார். இவர் இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே குடோன் ஒன்று அமைத்திருக்கிறார். இந்த சூழலில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் குடோன் உள்ளே சென்று, செந்தில் பால்ராஜுக்கு சொந்தமான இண்டிகா கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்திருக்கிறார்கள். வாகனங்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்ட பால்ராஜ், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு கார் மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

இப்படி பா.ஜ.க. பிரமுகர்களை குறிவைத்து தொடர்ந்து நடந்த தாக்குதல் சம்பவங்களால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்களை உஷார்படுத்தி இருக்கிறார். வாகன சோதனை, போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் டி.ஜி.பி. உத்தரவிட்டிருக்கிறார்.


Share it if you like it