நாங்குநேரி சம்பவம் – தமிழகம் அழிவின் விளிம்பில் வளரும் சந்ததிகள் அபாயத்தின் எல்லையில் நிற்பதற்கான எச்சரிக்கை.

நாங்குநேரி சம்பவம் – தமிழகம் அழிவின் விளிம்பில் வளரும் சந்ததிகள் அபாயத்தின் எல்லையில் நிற்பதற்கான எச்சரிக்கை.

Share it if you like it

குடும்பத்தை விட்டு வெளியுலகம் காண முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தைகளின் இன்னொரு தாய் வீடாக குடும்பமாக இருந்த வகுப்பறைகள் வழிகாட்டும் பாதுகாப்பு அரண்களாக இருந்த பள்ளி வளாகங்கள் அறவழியிலும் தர்ம நெறியிலும் மாணவர்களை வழி நடத்திய காலத்தில் மாணவர்கள் மத்தியில் சாதி – இன – மொழி – மத பேதங்கள் இல்லை. மாறாக அன்பு – சகோதரத்துவம் – சகிப்புத்தன்மை – பல்லுயிர் ஓம்பும் மனிதம் – சமூகப் பொறுப்பு – அறம் சார்ந்த சிந்தனைகள் என்று உயர்ந்த பண்புகளும் நல் ஒழுக்கமும் சேர்ந்தே வளர்ந்தது. கல்வித் திறமையில் மாணவர்களிடையே வேறுபாடு இருந்தால் கூட நல்ல ஒழுக்கம் – பண்பாடு என்ற வகையில் ஒவ்வொரு மாணவனும் நல் முத்தாகவே இருந்தான்.

இதில் அரசு பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த பேதமும் இருந்ததில்லை. ஆசிரியர்கள் மாணவச் செல்வங்களை வழிநடத்தும் குரு ஸ்தானத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கு அடுத்த நிலையிலான வழிகாட்டியாகவும் பெற்றோர்களுக்கு தங்களைப் போலவே தங்களின் குழந்தைகளை பாதுகாக்கும் அரணாகவும் இருந்தார்கள். இந்த நம்பிக்கையும் புரிந்துணர்வும் ஆசிரியர்கள் – மாணவர்கள்- பெற்றோர்கள் இடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு உறவு பாலத்தை கட்டமைத்திருந்தது.

ஆசிரியர் எதைச் செய்தாலும் அது தன் குழந்தைகளுக்கு நல்லதுக்கு தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை பெற்றோரிடம் இருந்தது. பெற்றோர்கள் அவர்களுக்கு அடுத்த நிலையில் அவர்களின் குழந்தைகளின் நம்பி ஒப்படைத்திருப்பது நம்மிடம் தான் என்ற பொறுப்புணர்வு ஆசிரியர்களிடம் இருந்தது இந்த பெற்றோர் ஆசிரியர் என்ற இரண்டு கரைகளுக்கு இடையில் மாணவச் செல்வங்கள் கல்வி கடலில் பாதுகாப்பாக நீந்தி வாழ்வில் நல்ல நிலையில் கரைசேர முடிந்தது.

கல்வி – விளையாட்டு – சிறு சிறு வேலைகள் – உழைப்பு பயிற்சி – குடும்பத்துடனா ன பொழுதுபோக்கு – உறவுமுறை கூடுகை – எப்பொழுதாவது அபூர்வமாக திரைப்படம் சார்ந்த பொழுதுபோக்கு என்று இருந்த மாணவர் சமூகத்தை முழுமையாக தொலைக்காட்சி – திரைப்படம் பொழுதுபோக்கு ஊக்கிகளாக மாற்றி அமைத்ததும் சில பேர் கோடிகளில் புரள இந்த தேசத்தின் எதிர்கால சந்ததிகளான மாணவர்களை வெறும் பொழுதுபோக்கையும் போதை – வன்முறை -ஆபாசம் – கலாச்சார சீரழிவு என்ற மாயமான்களின் பின்னே பின் தொடர்ந்து போக விட்டதின் பலனை இன்று தமிழகம் கை மேல் அறுவடை செய்கிறது.

பொழுது போக்காக நுழைந்த திரைப்படங்கள் உளவியல் ரீதியான தாக்குதலை ஏற்படுத்த வல்ல காட்சி ஊடகங்கள் என்ற உந்துதலில் தன் பொறுப்புணர்ந்து அறம் சார்ந்த சிந்தனையை முன்னெடுக்க தவறியதன் விளைவுதான் இன்றைய இளைஞர்கள் மத்தியில் காணும் அத்தனை சீரழிவுகளுக்கும் பெரும் காரணம். புகைப்பது- மது அருந்துவது தொடங்கி பெற்றோர் – ஆசிரியர் – மூன்றாம் நபர்கள் என்று அனைவரையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவத்தை ஹீரோயிசம் ஆகவும் , வரம்பு மீறுவதை துணிச்சலின் அடையாளமாக, எந்த வரையறைக்கும் நில்லாது மனம் போன போக்கில் எல்லாம் போவதை நாயாக பிம்பமாக கட்டமைத்த திரைப்படத்துறை தான் வளரிளம் தலைமுறையை சீரழித்தது என்பதே கசப்பான உண்மை. பதின்ம வயதில் இருக்கும் குழந்தைகள் பார்ப்பதையும் – கேட்பதையும் – உணர்வதையும் எல்லாம் தன்னில் அதிகம் ஏற்றுக்கொள்ளும் நெருக்கடியான காலகட்டம் என்பதை உணர்ந்து கூட விடலை பருவத்தில் இருக்கும் அந்த இளம் பிஞ்சுகளை தவறான வழியில் திட்டமிட்டு மடைமாற்றியதை திரைப்படத்துறைக்கும் அதை கண்டிக்காமல் விட்ட அரசு – ஊடகம் – சமூகம் என்று அத்தனை பேரும் இதில் குற்றவாளிகளே.

மாணவர்கள் படியில் தொங்குகிறார்கள். தட்டி கேட்டால் ஓட்டுநர் – நடத்துனரை அடிக்க வருகிறார்கள் என்று ஆணையர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் புகார் கொடுப்பதும் அதே மாணவர்கள் சாலைகளில் தினமும் விபத்தில் படுகாயம் மரணத்தை எதிர்கொள்வதும் சாதாரண விஷயமல்ல. வகுப்பறையில் ஆசிரியர் – தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களை மிரட்டுவதும் தாக்குதல் நடத்துவதும் அவர்கள் எதை திரையில் பார்த்தார்களோ அதுவாகவே அவர்கள் மாறி வாழத் தொடங்கியதன் எச்சமே.

பள்ளி வகுப்பறை – பாட புத்தகம் தொடங்கி உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் கூட ஒரே சீராக இருக்க வேண்டும். அது மட்டுமே குழந்தைகள் மனதில் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை மேலோகச் செய்யும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பெருந்தலைவர் காமராசர் கொண்டு வந்த பள்ளிச் சீருடை – சத்துணவுத் திட்டம் என்ற திட்டங்களின் பின்னால் இருந்த உளவியல் ரீதியான நல்லெண்ணை நடவடிக்கையை புறந்தள்ளி தங்களின் அரசியல் சித்தாந்தங்களின் வழியில் அடுத்தடுத்த தலைமுறைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்த மண்ணிற்கு கொஞ்சமும் ஒவ்வாத சிந்தனைகளை தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் மாணவர்கள் மத்தியில் திராவிட அதிகாரம் வளர்த்ததும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உரிய அறம் சார்ந்த தர்ம சிந்தனைகளை அவர்களிடத்தில் இருந்து பிரித்ததுமே இன்றைய குழந்தைகளின் சீரழிவிற்கு காரணம்.

சாதி என்பது குல அடையாளமாகவும் மனிதம் என்பது நமது பிறவி பண்பாகவும் இருந்தவரையில் சாதிய பிளவுகள் இல்லை. ஆனால் சாதியின் பெயரில் ஒதுக்கீடு வேண்டும். சாதியின் பெயரில் அரசியல் வேண்டும். சாதியின் பெயரிலான அடையாளத்தை முன்னெடுக்கும் அனைத்தும் வேண்டும். ஆனால் அது எனக்கு மட்டும் வேண்டும். மற்ற சாதிகளுக்கு இருக்கக் கூடாது என்ற வன்மக்காரர்கள் திட்டமிட்டு சாதியை பிளவுகளையும் மோதல்களையும் எந்த காலத்திலும் அணைய விடாது கொழுந்து விட்டு எரியச் செய்ய வேண்டும். அதன் மூலம் குளிர் காய்ந்து தங்களுக்கான அரசியல் ஆதாயத்தை தக்க வைக்க வேண்டும் என்ற சூழ்ச்சிக்கு நம் தலைமுறை பலியாகி வருகிறது.

பள்ளிக்கு வர முடியாமல் வீட்டில் உடல் நல குறைவில் இருக்கும் தன் சக மாணவனுக்காக பள்ளி பாடங்களை எழுதிக் கொடுப்பது முதல் வகுப்பறையில் நடந்த பாடங்களை அவனுக்கு வீட்டுக்கே போய் சொல்லிக் கொடுத்து கவலைப்படாதே எல்லாம் சரியாகும் என்று ஆறுதல் சொல்லி வழி நடத்திப் போகும் நல்லெண்ண நண்பர்களாக இருந்த வளரிளம் சமூகம் இன்று வன்மம் கொண்டு ஒருவரை ஒருவர் அச்சுறுத்திக் கொள்வதும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி கொலை வெறியோடு உயிர் வாங்கும் அளவில் வந்து நிற்பதெல்லாம் நம் சந்ததியினர் அழிவு பாதையில் பயணிக்கும் அபாய எச்சரிக்கையே. கால் நூற்றாண்டு காலம் முன்பே நாம் கடந்து வந்த கசப்பான விஷயங்களை எல்லாம் சிலரின் தேவைக்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் வன்மமாக சித்தரித்து மீண்டும் மீண்டும் திரையிடுவதும் அதை பல்வேறு திரிபுகளை இட்டுக்கட்டி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு ஆதரவாக கருத்தியல் விதைக்கிறேன் என்ற பெயரில் பல சார்புள்ளவர்களையும் உளவியல் ரீதியாக துன்புறுத்தி அவர்கள் மீது கருத்து திணிப்பு என்ற பெயரில் வன்மத்தை கக்குவதன் வெளிப்பாடுதான் இன்று சக நண்பர்களாக தோழர்களாக உதவ வேண்டிய மாணவர்கள் தங்களையே ஒருவர் ஒருவர் வெட்டிக் கொண்டு மடியும் வேதனை.

அடங்க மறு – அத்து மீறு என்று வளரும் பிஞ்சுகளை தவறாக வழி நடத்திய சாதி வெறி அரசியல்வாதிகள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் கண்டவர்கள் சாதிய பிளவுகளை உருவாக்குவதும் அதன் மூலம் குளிர் காய்ந்து தன் வாக்கு வாங்கி அரசியலை தக்க வைப்பதும் தங்களின் ஆட்சி அதிகாரத்தை பாதுகாப்பதற்குமான தங்களின் வன்மத்திற்கு இன்று ஒரு குடும்பம் சிதைந்ததை கள்ள மௌனமாக கடந்து போகும் முற்போக்கு சமூக நீதி நாலாந்தர அரசியல் அன்றி வேறல்ல.

அடக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம் துன்புறுத்தப்பட்டோம் அதைத்தான் திரையில் காண்பிக்கிறோம் என்று ஆயிரம் சமாதானங்களை சொன்னால் கூட ஆறிய ரணங்களை கீறி அதன் மூலம் அவர்கள் சுய இன்பம் காணும் பிறழ் முரண் சிந்தனை. அதிலும் பொய் புரட்டு – திரிபால் அவர்களுக்கான அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் இந்த சமூகத்தை சாதிய பிளவு வன்மம் – வன்முறை தாக்குதல் என்று மறந்து போன விஷயங்களை எல்லாம் மீண்டும் இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது. அதன் மூலம் அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்த சமூகத்தை பின்னோக்கி கொண்டு போகும் சதியே. இதை அதன் மூலம் சுயலாபம் அடைபவர்கள் கேட்க மாட்டார்கள். அரசியல் ஆதாயம் அடையும் கட்சிகள் அமைப்புகள் தடுக்கவும் மாட்டார்கள். ஆனால் இதை முன் வைத்து மீண்டும் இங்கு ஒரு சாதிய பிளவை அரசியலை நிறுவி குளிர் காய்வார்கள். இத்தனை சீரழிவுகளுக்கும் இடையில் குழந்தைகளை பத்திரமாக கட்டி காப்பதும் அவர்களை அற வழியில் வழி நடத்திப் போக வேண்டிய கடமையும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு அதிகம் இருக்கிறது.

1980 – கள் வரையில் தமிழக அரசு பள்ளிகளில் நன்னெறி வகுப்பு என்று ஒரு வகுப்பு இருந்தது . தமிழ் ஆசிரியர் – உடற்கல்வி ஆசிரியர் அல்லது விருப்பமுள்ள யாரோ ஒரு ஆசிரியர் அந்த வகுப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு தர்ம சிந்தனைகள் – நல்ல ஒழுக்கம் – பண்பாடு – நேர்மை – விடாமுயற்சி – தனிமனித ஒழுக்கம் – சமூக அக்கறை உள்ளிட்ட நற்பண்புகளை எல்லாம் வளர்க்கும் விதமான அறிவுரைகளையும் வரலாற்று கதைகளையும் இதிகாசம் புராணங்களில் இருந்து உதாரணங்களையும் மேற்கோள் காட்டி பண்டைய வாழ்வியலின் பெருமையையும் அதன் மூலம் நமக்கு கிடைக்க பெறும் நற்பலன்களையும் பயிற்றுவித்தார்கள்.

மேலும் உடற்கல்வி வகுப்பு கட்டாயமாக இருந்தது. சிறு சிறு கைவினைப் பொருட்கள் கைத்தொழில் உள்ளிட்டவற்றை பயிற்றுவிக்கவும் தனியாக ஒரு வகுப்பு இருந்தது. ஆண்டுதோறும் உள்ளூரில் இருக்கும் நல்ல மனிதர்களின் துணையோடு பள்ளிகளில் மாணவர்கள் இடையே நல்ல ஒழுக்கம் – பண்புகள் – நற் சிந்தனைகள் வளர்க்கும் விதத்தில் தலைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் பேச்சுப்போட்டி – கட்டுரை போட்டி – விவாத போட்டி என்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டு அவர்களின் பன்முகத்திறமை ஊக்குவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்களின் மனவளம் – சுய சிந்தனை – ஆய்ந்து அறியும் பகுத்தறிவு உள்ளிட்ட பன்முகத் திறன்கள் வளர்க்கப்பட்டு மாணவர்களுக்கு நன்மை – தீமை , சரி – தவறு , தர்மம் – அதர்மம் எது ? என்ற தெளிவான புரிதல் இருந்தது . அதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் ஒழுக்கம் பண்பாடு மாறாமல் கல்வியில் ஏறக்குறைய இருந்தால் கூட நல்லொழுக்கமான மாணவர்கள் என்ற நிலையில் இருந்து அடி பிறழாமல் இருக்க முடிந்தது.

மறுபக்கம் அந்த வகையில் தமிழக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு ஏட்டுக்கல்வியை கடந்து பேச்சு – எழுத்து மற்றும் விவாத திறமை வரலாறு – இலக்கிய சிந்தனை – சமூகப் பொறுப்பு உள்ளிட்ட தலைமை பண்புகள் கல்வியோடு சேர்ந்து வளர்ந்தது. அவ்வகையில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வியோடு யதார்த்த வாழ்விற்கு தேவையான அத்தனையும் வகுப்பறைகளில் படிக்க முடிந்தது.

ஆனால் 80 களின் இறுதியில் இந்த நன்னெறி வகுப்பு கைத்தொழில் வகுப்பு காலாவதி ஆனது. பகுத்தறிவு என்ற பெயரில் இந்து இந்திய விரோதமும், கம்யூனிசம் சித்தாந்தம் என்ற பெயரில் எல்லோரையும் எப்போதும் எதிர்த்து வாழ்வதே புரட்சி என்ற தவறான வழிகாட்டலும் , தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாட்டு சிதைவு கலாச்சார சிதைவை புகுத்தியதன் விளைவு இன்று மாணவர் சமூகம் சீரழிவின் விளிம்பில் நிற்கிறது.

ஆட்சியாளர்களை மனம் குளிரச் செய்து அதன் மூலம் தங்களின் சுய ஆதாயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைத்த பல கருங்காலிகளின் சுயநலத்தால் பள்ளி பாடங்களில் இருந்த தர்ம சிந்தனைகள் நல்லொழுக்கங்களை பயிற்றுவிக்கும் இறைவாழ்த்து பாடல்கள் தொடங்கி தேவாரம் – திருவாசகம் – திருப்பாவை உள்ளிட்ட வளரும் குழந்தைகளுக்கு நல்ல வழியை காட்டும் சிந்தனைக் களங்கள் எல்லாம் பள்ளி பாடங்களை விட்டு நிரந்தரமாக அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர் சமூகம் நன்மை தீமை சரி தவறு பாவம் புண்ணியம் என்ற வழிகாட்டுதல் இன்றி கண்களை கட்டி காட்டில் விட்டது போல தத்தளிக்க தொடங்கியது. நல்லொழுக்கத்தை பண்பாட்டை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே கண்ணியமற்ற ஆடை – போதைப்பொருள் உபயோகம் என்று வகுப்பறையில் வரம்பு மீறினார்கள். மறுபக்கம் எந்த வழிகாட்டுதலும் நற்பண்புகளும் இல்லாத மாணவர்கள் தான்தோன்றித்தனமாக முழுமையான கலாச்சார சீரழிவில் விழுந்து விட்டார்கள்.

இதையெல்லாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டிய பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகளும் தங்களின் பகுத்தறிவு சித்தாந்தம் திராவிட சித்தாந்தம் குறைப்படாமல் இருந்தால் போதும் . அதன் காரணமாக மாணவ சமூகம் முற்றிலுமாக சீரழிந்தாலும் பரவாயில்லை . ஆனால் எந்த நிலையிலும் அவர்கள் மத்தியில் நல்லொழுக்கம்- பண்பாடு – கலாச்சாரம் என்ற பெயரில் இந்த மண்ணிற்குரிய தர்மமும் வரலாறும் மட்டும் எந்த காலத்திலும் தெரியவே கூடாது . அதை அவர்களுக்கு தெரியப்படுத்த நினைப்பவர்கள் யாரையும் அரசு பள்ளிகளுக்கு உள்ளே வகுப்பறையில் மாணவர்களோடு நெருங்கவே விடக்கூடாது என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தது. அதன் பலன் தான் தகப்பன்- மகன் என்ற உறவை காட்டிலும் உயர்ந்து நின்ற குரு – சிஷ்யன் என்ற புனிதமான உறவு இன்று முழுவதுமாக சிதிலமடைந்து மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர் எதிர் துருவங்களாக நிற்கிறார்கள். மறுபுறம் தாய் தந்தை குடும்பம் என்ற மரியாதை பற்றுதல் இன்றி குழந்தைகள் விபரீத பாதையில் பயணிக்கும் அபாயம் நிலவுகிறது.

இதன் விளைவு ஒருபுறம் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை – கலாச்சார சீரழிவு என்ற வகையில் பள்ளியிலேயே அத்துமீறுகிறார்கள். தட்டி கேட்ட ஆசிரியர்களை அடிப்பது உதைப்பது அவமதிப்பது என்பதையெல்லாம் கடந்து சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் ஆசிரியை செல்போனில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த தனது மாணவனை கண்டித்த காரணத்திற்காக வகுப்பறையில் வைத்தேன் அந்த மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவங்கள் கூட நடந்தது.

ஒருபுறம் ஆசிரியர்கள் மாணவிகளிடம் வரம்பு மீறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள். மறுபுறம் ஆசிரியர் மாணவர் இடையே காதல் என்ற கன்றாவி. இன்னொரு புறம் மாணவர்களை அவர்களின் ஒழுங்கீனமான செயலுக்காக கண்டித்த ஆசிரியர்கள் மீது மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் ஒன்று கூடி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள். மாணவர்கள் கும்பலாக ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி வகுப்பறையை சூறையாடும் சம்பவங்களையும் கண்முன்னே பார்க்கிறோம்.

தனிமனித ஒழுக்கம் – சமூக அக்கறை – கட்டுக்கோப்பான வாழ்வியல் ஒன்றே சிறந்த மாணவர்களை உருவாக்கும். இன்றைய சிறந்த மாணவர் சமூகம் தான் நாளைய சிறந்த தேசிய குடிமக்களை உருவாக்கும் . அந்த சமூகம் தான் வலுவான தேசத்தை கட்டமைக்கும் என்ற புரிதலை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டும். திராவிட சித்தாந்தம், பிரிவினைவாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் , மத பயங்கரவாதிகளின் அரசியல் செல்வாக்கு இவை காரணமான வாக்கு வங்கி என்ற உங்களின் அரசியல் சுயநலத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழகத்தின் நலன் கருதி மாணவர்களின் நலன் கருதி இனியனும் மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்கங்களை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த வாழ்வியலை அதன் உன்னதத்தை மாணவர்கள் உணரும்படி எடுத்துச் சொல்வதற்கு உரிய வாய்ப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக கட்டமைக்க வேண்டும்.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் மத்தியில் சாதி மத துவேஷம் – தனிப்பட்ட வன்மம் – போதை வன்முறை கலாச்சார சீரழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றியும் அவர்கள் மத்தியில் நன்னெறியும் தர்ம சிந்தனையும் தனிமனித ஒழுக்கம் சமூக அக்கறை உள்ளிட்ட நற்பண்புகளை வளர்க்கும் நன்னெறி வகுப்புகள் மீண்டும் பள்ளிகளில் தொடங்கப் பட வேண்டும். உடற்கல்வி யோடு யோகா சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் கிடைக்கப் பெற்றால் மாணவர்கள் மனவளம் நல்வழி படும்.

நம்மில் பலருக்கும் கட்சி அரசியல் சித்தாந்தம் சார்பாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் மோதல்கள் இருக்கலாம். ஆனால் அனைத்தையும் கடந்து நாமெல்லாம் தாய், தந்தையர் என்ற வகையில் நம்முடைய குழந்தைகளையும் , நம் சமூகத்தில் இருக்கும் நாம் பெற்றெடுக்காமல் போனாலும் நம் குழந்தைகளைப் போலவே இருக்கும் அத்தனை குழந்தைகளையும் நல்வழியில் கொண்டு போக வேண்டிய சமூக அக்கறையும் தேசிய கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது . அதை உணர்ந்து பெற்றோர் ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாநில அரசு என்று அனைவரும் ஒருங்கிணைந்து சில ஆண்டுகள் தன்னலம் மறந்து தொடர்ச்சியாக உழைத்தோமானால் நிச்சயம் தனிப்பட்ட வன்மம் போதைப் பொருள் அற்ற சமூகத்தையும் – போதை – வன்முறை -கலாச்சார சீரழிவு இல்லாத பொறுப்பான மாணவர் சமூகத்தையும் நிச்சயம் நம்மால் கட்டமைக்க முடியும்.

பிரிவினைவாதிகளுக்கும் மாற்று மத சித்தாந்தங்களை போதிப்பவர்களுக்கும் அனைத்து அரசு பள்ளிகளின் வாயில்களையும் திறந்து வைத்திருக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை இனியாவது மாணவர்கள் மத்தியில் நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் சமூக பொறுப்பு வளர்க்க நன்னெறி வகுப்பு மற்றும் பண்பாட்டு பாரம்பரிய வழியில் கலை இலக்கிய சிந்தனை வளர்க்க முன் வர வேண்டும்.


Share it if you like it