நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றம், நாடாளுமன்றம் என தி.மு.க. போராடுவது வெறும் கபட நாடகம் என்பது அக்கட்சியின் மாஜி அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதிலிருந்து அம்பலமாகி இருக்கிறது.
ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை கருத்தில் கொண்டும், பணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாகவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு. ஜனாதிபதியின் பேரனாக இருந்தாலும் நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம்பெற முடியும் என்பது நிதர்சனம்.
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்கள்கூட நீட் தேர்விற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், கல்வியில் மிகச் சிறந்த மாநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. இதற்குக் காரணம், மருத்துவக் கல்லூரிகள் மூலம் கோடி கோடியாக கொட்டிக் குவிக்கும் மருத்துவ மாஃபியாக்களின் தூண்டுதல்தான் என்பது அனைவரும் அறிந்ததே. காரணம், மாநில அரசுக்கு கப்பம் கட்டிவிட்டு, தாங்கள் நிர்ணயித்த தொகையை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்பதே. இதுதான் நிதர்சனம் என்பது கடந்த காலத்தில் மாஜி அமைச்சர் பேசிய பேச்சின் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
மருத்துவக் கல்லூரி உரிமையாளர்களிடம் எப்படி எப்படியெல்லாம் வசூல் வேட்டை நடத்த முடியும் என்று புட்டுப் புட்டு வைக்கிறார் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீரசாமி. அதாவது, ஒரு மருத்துவக் கல்லூரி அதிபரிடம் இவ்வளவு தொகை வாங்கினால், இன்னொரு மருத்துவக் கல்லூரி அதிபரிடம் அதை விட அதிக தொகை வாங்குவோம் என்று ஏற்கெனவே அவர் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு, ஓகோ இதற்காகத்தான் தி.மு.க. அரசு நீட் தேர்வை எதிர்க்கிறதோ என்று கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.