மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க பிரதமர் மோடி, அழைப்பு விடுத்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
2-ம் கட்டமாக கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா கேரளாவில் இன்று வாக்களித்தார். செய்தியாளர்களிடம் மேனகா கூறியதாவது : எந்த ஒரு விஷயத்திலும் மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். ஒரே ஆட்சியானது தொடர்ந்து நீடித்தால் அது சரியாக இருக்காது. கடந்த 15 வருடமாக திருவனந்தபுரத்தில் என்ன மாதிரியான ஆட்சி நடக்கிறது என்பது நமக்கு தெரியும். அதிலிருந்து தற்போது மாறுதலாக புதிய ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். 15 வருடமாக நடந்து வரும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாமல் நல்ல ஆட்சி வந்தால் தான் நன்றாக இருக்கும்.
செய்தியாளர் : மாற்று கட்சி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளை விட பாஜக தான் இருக்கிறது. பாஜக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்களா ?
மேனகா : கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. கேரளாவில் பாஜக ஆட்சி வரவே இல்லை. தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சிதான் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. அதனால் தான் பாஜக வர வேண்டும்.
செய்தியாளர் : பாஜகவை தமிழகத்திலும் கேரளாவிலும் தொடர்ந்து நிராகரித்து வருகிறார்களே ?
மேனகா : பத்து தடவை கீழ விழுந்தாதான் 11 வது தடவை மேல எழ முடியும்.
செய்தியாளர் : கேரளாவில் பாஜக வர வாய்ப்பு இருக்கா ? எங்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கு ?
மேனகா : கண்டிப்பா நிறைய இடத்துல வரும். குறிப்பாக திரிச்சூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வரும். சுரேஷ் கோபி கண்டிப்பா ஜெயிப்பாரு. தாமரை ஜெயிப்பதற்கு நெறைய வாய்ப்பு இருக்கு. எல்லாமே மக்கள் கையில் தான் இருக்கு.