தருமபுரியில் செயல்பட்டு வரும் ‘மை தருமபுரி’ என்ற தன்னார்வ அமைப்பு நேதாஜி படையில் பணியாற்றிய பெண் கமாண்டரான சிவகாமியம்மாவின் 92-வது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளது.
இந்த அமைப்பு பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத 46 சடலங்களை காவல்துறையின் துணையுடன் இறுதிச் சடங்கு செய்துள்ளனர். அதேபோல, கொரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயத்தில் ஏழை, எளியவர்கள் மற்றும் யாசகர்களுக்கு வேண்டிய உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தனர்.
இந்தப் பணிகளை தற்போது வரை இந்த அமைப்பினர் தொடர்ந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நேதாஜியின் தேசிய ராணுவப் படைப் பிரிவில் இடம்பெற்றிருந்த, தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த பெண் கமாண்டரான சிவகாமியம்மாவின் 92-வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவினை மை தருமபுரி அமைப்பினர் மிகச் சிறப்பாக கொண்டாடினர்.