திருநெல்வேலியில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த நர்ஸ் குடும்பத்துக்கு உதவி கோரி, இந்து முன்னணி சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி முருகலட்சுமி. இத்தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். முருகலட்சுமி, திருநெல்வேலியிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். ஆகவே, பெண் குழந்தைகள் இருவரையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டார் சின்னத்தம்பி. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் முருகலட்சுமிக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இத்தலைவலி தொடர்ந்து நீடிக்கவே, தான் வேலை பார்க்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்திருக்கிறார். அங்கு சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது, அவரது தலையில் மூளைக்குச் செல்லும் நரம்பில் அடைப்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், ரேடியோலாஜிஸ்டோ ரிப்போர்ட் நார்மல் என்று கொடுத்து விட்டாராம்.
தனால், மருத்துவமனையில் தலைவலிக்கான மாத்திரையை மட்டும் கொடுத்து வீடுக்கு அனுப்பி விட்டார்கள். அந்த மாத்திரையை சாப்பிட்டும், முருகலட்சுமிக்கு தலைவலி நிற்கவில்லை. மாறாக, தலைவலி கூடுதலாகி இருக்கிறது. எனவே, மீண்டும் ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆயத்தமாகி இருக்கிறார் முருகலட்சுமி. ஆனால், அதற்குள் அவர் மயக்கமாகி விட்டார். உடனே, அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு மீண்டும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சேர்த்திருக்கிறார்கள். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவில் முருகலட்சுமியை அட்மிட் செய்த மருத்துவர்கள், அதன்பிறகு 2 நாட்களுக்கு முருகலட்சுமியை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டதற்கு, முருகலட்சுமி மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவரை மீட்டுக் கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால், 2 நாட்களாகியும் முருகலட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தார் அவரது கணவர் சின்னத்தம்பி. எனவே, இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டரை சந்தித்து பேசியிருக்கிறார். அவரும் ஆவண செய்வதாகக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மீண்டும் ஆஸ்பத்திரிக்குச் சென்ற சின்னத்தம்பி, உடல் உறுப்புதானம் குறித்து கலெக்டரிடம் பேசிய விவரத்தை டாக்டர்களிடம் கூறியிருக்கிறார். இதன்ால், அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் எங்கே தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து, அதன் பிறகே முருகலட்சுமி இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், முருகலட்சுமியுடன் பணிபுரிந்த சில நர்ஸ்களிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதுதான், உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, முதல்முறை ஸ்கேன் எடுத்து பார்த்தபோதே, முருகலட்சுமியின் தலையில் மூளைக்குச் செல்லும் நரம்பில் சிறிய அளவில் அடைப்பு இருந்ததும், ஆனால், அதை ரேடியோலாஜிஸ்ட் சரியாக கவனிக்காமல் நார்மல் ரிப்போர்ட் கொடுத்ததும் தெரிவந்திருக்கிறது. மேலும், இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோதே முருகலட்சுமி இறந்து விட்டதாகவும், டாக்டர்கள் தங்கள் தவறை மறைக்க, மூளைச்சாவு அடைந்து விட்டதாகக் கூறி ஏமாற்றியதும் தெரியவந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து, முருகலட்சுமியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இறப்புக் காரணத்தை மருத்துவமனை நிர்வாகம் விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனிடையே, இந்து முன்னணி அமைப்பினரை சந்தித்து நடந்த விவரங்களை கூறியிருக்கிறார் முருகலட்சுமியின் கணவர் சின்னத்தம்பி. இதன் பிறகு, முருகலட்சுமியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு சென்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் மனோகர் மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் ஆகியோர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். அமைச்சரும், மாநில மருத்துவ இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்து நஷ்டஈடு மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்திருக்கிறார்.