ஆபாசமாகத் திட்டும் தி.மு.க. சேர்மன் கணவர்… பெண் கவுன்சிலர்கள் கண்ணீர், ராஜினாமா முடிவு!

ஆபாசமாகத் திட்டும் தி.மு.க. சேர்மன் கணவர்… பெண் கவுன்சிலர்கள் கண்ணீர், ராஜினாமா முடிவு!

Share it if you like it

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. பெண் சேர்மனின் கணவர் ஆபாசமாகத் திட்டுவதாகக் கூறி, பெண் கவுன்சிலர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தி.மு.க.வைச் சேர்ந்த 3 பெண் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் தி.மு.க.வைச் சேர்ந்த பெண்கள் தலைவர்களாக இருக்கும் இடங்களில் எல்லாம், அவர்களது கணவர்களின் அதிகாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் யூனியன் சேர்மனாக இருப்பவர் சௌமியா. இவரது கணவர் ஜெகதீஷ். சேர்மனாக சௌமியா இருந்தாலும், ராஜ்ஜியம் முழுக்க ஜெகதீஷின் கன்ட்ரோலில்தான் இருந்து வருகிறதாம். இதனால், பெண் கவுன்சிலர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவதோடு, ஆபாசமாகவும் பேசுவதாகக் கூறப்படுகிறது. மேலும், யூனியனில் விடப்படும் டெண்டர்கள் அனைத்தும் சேர்மன் சௌமியாவின் அண்ணன் மகன் நிதீஷ்குமாருக்கும், அவர் கைகாட்டும் நபர்களுக்கும்தான் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. நீருபூத்த நெருப்பாக இருந்து வந்த இந்த விவகாரம், நேற்று நடந்த கூட்டத்தில், எரிமலையாக வெடித்து விட்டது.

ராதாபுரம் யூனியன் சாதாரண கூட்டம் சேர்மன் சௌமியா ஜெகதீஷ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த 15-வது வார்டு பெண் கவுன்சிலர் பிரேமா, 3 தீர்மானங்களை கொண்டு வந்தார். ஆனால், 3 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக சேர்மன் சௌமியா ஜெகதீஷ் கூறியிருக்கிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெண் கவுன்சிலர்கள் பிரேமா, பரிமளம் கருணாநிதி, அனிதா ஸ்டெல்லா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூட்ட அறைக்குள் வந்த சேர்மன் சௌமியாவின் அண்ணன் மகன் நிதீஷ்குமார், கவுன்சிலர் பரிமளம் கருணாநிதியின் தொடையில் ஏறி மிதித்திருக்கிறார். இதை பரிமளம் கருணாநிதி தட்டிக்கேட்டதற்கு, வழியில் உட்கார்ந்திருந்தால் அப்படித்தான் ஏறி மிதிப்பேன் என்று திமிராகக் கூறியிருக்கிறார்.

இதனால், வேதனையடைந்த கவுன்சிலர் பரிமளம் கருணாநிதி, அழுதபடியே கூட்டத்தை விட்டு வெளியே வந்தார். அவருடன் பிரேமா மற்றும் அனிதா ஸ்டெல்லா ஆகியோரும் சோகமாக வந்தனர். இதைக் கண்ட செய்தியாளர்கள், 3 கவுன்சிலர்களையும் வழிமறித்து நடந்த சம்பவம் பற்றி கேட்டிருக்கிறார்கள். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமா, ராதாபுரம் யூனியனில் பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வார்டுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. கேட்டால், சேர்மன் சௌமியாவின் கணவர் ஆபாசமாகத் திட்டுகிறார். சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களுக்கே இந்த நிலை என்றால், எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். மேலும், பெண் கவுன்சிலர்களுடன் போனில் பேசுவதை ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்டு, மற்ற கவுன்சிலர்களுக்கு மத்தியில் ஸ்பீக்கரில் போட்டு கேட்டு அவமானப்படுத்துகிறார்கள். ஆகவே, நாங்கள் எங்களது கவுன்சிலர் பதவியை ராஜானாமா செய்ய முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

தி.மு.க. ஆட்சியில் பட்டியல் சமூகத்தினரும், கூட்டணிக் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும்தான் அவமதிக்கப்படுகிறார்கள் என்று நினைத்தால், சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களும் அவமானப்படுத்தப்படுவது வேதனைக்குரிய விஷயம்தான். மேலும், பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலையில், இவர்கள் நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்புத் தர முடியும் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


Share it if you like it