மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கைக்கு முரணாக, செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பொய்ச் செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆவேசம் காட்டி இருக்கிறார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. இவர், தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். திடீரென கடந்த ஜனவரி மாதம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு காரணம், பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற டார்ச்சர்தான் என்று கூறப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. ஏற்கெனவே, லாவண்யாவின் பெற்றோர், பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. விசாரணையை முடித்திருக்கும் நிலையில், தற்போது மாணவிக்கு கடைசி நேரத்தில் சிகிச்சை அளித்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மாணவி தற்கொலை மற்றும் மதமாற்ற முயற்சி குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் முதல்கட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் மதமாற்ற முயற்சி நடக்கவில்லை என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்திருப்பதாக நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதுதான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டென்ஷனாக்கி இருக்கிறது. காரணம், தேசிய குழந்தைகள் நல ஆணைய அறிக்கையில், மதமாற்றம் காரணமில்லை என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இதை சுட்டிக்காட்டி இருக்கும் அண்ணாமலை, ‘மீடியாக்களின் கருத்து தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் அறிக்கைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது. உங்கள் பார்வைக்காக ஆணையம் வெளியிட்ட அறிக்கையை முழுமையாக அனுப்பி இருக்கிறேன். இதை மக்களுக்கு முழுமையாக எடுத்துச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, நியூஸ் 7 தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய பத்திரிகை தகவல் அமைப்பில் புகார் செய்திருக்கிறது சட்ட உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், மாணவி லாவண்யா மரண விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்ட அறிக்கையை திரித்து பொய்ச் செய்தி வெளியிட்ட நியூஸ் 7 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நியூஸ் 7 கணக்கை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழக மீடியாக்களை கலாய்க்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களும் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
அண்ணாமலையின் ட்விட்டர் பதிவு…
சட்ட உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவு…
மீடியாக்களை கலாய்த்து நெட்டிசன்கள் வெளியிடும் மீம்ஸ்…