வாட்ஸ் ஆப், ஜூம், ஸ்கைப் போன்ற ஆப்கள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என்று புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிதாக ‘தொலைத்தொடர்பு மசோதா 2022’ என்றொரு மசோதைவை உருவாக்கி, அதை சட்டமாக இயற்றி அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த மசோதாவுக்கான வரைவை மத்திய அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக, அக்டோபர் 20-ம் தேதிவரை பொதுமக்கள் தங்களுடையை ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை வழங்கலாம் என்றும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்திருக்கிறார். இந்த மசோதா வரைவின் முக்கிய அம்சங்கள் தற்போது தெரியவந்திருக்கிறது.
அதாவது, புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் ஓ.டி.டி. இணைய தொலைத்தொடர்பு சேவைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாட்ஸ் ஆப், ஜூம், ஸ்கைப் போன்ற இணைய வழி அழைப்பு (இன்டெர்னெட் கால்) சேவைகளை வழங்க மத்திய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்நிறுவனங்கள் சேவைக்கான உரிமம் பெறுவதை ஊக்குவிக்க கட்டணத்தில் தள்ளுபடிகள் செய்து தரப்படும். என்ட்ரி கட்டணம், உரிமக் கட்டணம், பதிவுக் கட்டணம் இன்ன பிற கட்டணங்கள், வட்டி, கூடுதல் கட்டணம், அபராதத் தொகை போன்றவற்றை நிறுவனங்கள் செலுத்த வேண்டி வரும். இவற்றில் பாதி அல்லது முழு தொகையை தள்ளுபடி செய்து தர அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக வரைவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொலைத்தொடர்பு அல்லது இணைய சேவை நிறுவனங்கள் சேவையை நிறுத்திக்கொள்வதாக உரிமத்தை திரும்ப ஒப்படைத்தால், அந்நிறுவனங்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகங்களில் இந்தியாவுக்குள் பத்திரிகை செய்திகளை வெளியிடுவதற்கு அரசு ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதேசமயம், தேச பாதுகாப்பு, இறையாண்மை போன்ற அம்சங்களில் இந்த விலக்கானது பொருந்தாதது. தொலைத்தொடர்புத் துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கவே, இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மசோதா தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்பதாக தெரிவித்திருக்கிறது.