நியூசிலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன் கி பாத் 100-வது நிகழ்ச்சியைக் காண வந்திருந்த 100 வயது மூதாட்டி, பிரதமர் மோடியின் போட்டோவை தொட்டு வாழ்த்திய சம்பவம் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
2014-ம் ஆண்டு பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, முதல் 4 மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்கள்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்கிற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், மன் கி பாத் 100-வது நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு, மோடி ஹிந்தியில் பேசும் உரையானது, 22 இந்திய மொழிகள், ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு உட்பட 63 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் மன் கி பாத் நிகழ்ச்சியை இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் கலந்து கொண்டார். அதேபோல, அமெரிக்காவின் நியூஜெர்சியிலும் பிரமாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அந்த வகையில், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரிலும் மன் கி பாத் 100-வது நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதை காண இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, ராம்பென் என்கிற 100 வயது மூதாட்டியும் இந்தியர்களுடன் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார். நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனரில் பிரதமர் மோடியின் உருவம் இடம் பெற்றிருந்தது. இதனைக் கண்ட மூதாட்டி ராம்பென், பிரதமர் மோடியின் போட்டோவில் தலையை தொட்டு வாழ்த்திவிட்டு, கையெடுத்து கும்பிட்டார். இதன் பிறகு நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். இச்சம்பவம் காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.