தனது பங்களாவுக்கும், தேயிலை தோட்டத்துக்கும் செல்வதற்காக, அமைச்சரின் மருமகன் காப்புக்காட்டுக்குள் சாலை அமைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு அருகில் மேடநாடு வனப்பகுதி உள்ளது. இது, மேடநாடு வனப்பகுதி என்கிற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. இந்த பகுதியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமாருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் அமைந்திருக்கிறு. ஆகவே, தனது தேயிலைத் தோட்டத்துக்கு எளிதாகச் செல்லும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்திருக்கிறார். எனவே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்து வந்தனர். ஆனால், அமைச்சரின் மருமகன் என்பதால் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், சாலை அமைப்பது தொடர்பாக வனத்துறையினருக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட எஸ்டேட் மேலாளர் பாலகிருஷ்ணன், பொக்லைன் ஓட்டுநர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த உமர் பாருக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்குமார் சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சாலை பணிக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, எஸ்டேட் உரிமையாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனின் மருமகன் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.