நம்பிக்கை இல்லா தீர்மானம்  – துவம்சம் செய்த 56 அங்குலம். தன்னம்பிக்கையை இழந்து ஒடி ஒளிந்த எதிர் கட்சிகள்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் – துவம்சம் செய்த 56 அங்குலம். தன்னம்பிக்கையை இழந்து ஒடி ஒளிந்த எதிர் கட்சிகள்.

Share it if you like it

சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் பெரும்பாலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது கம்யூனிஸ்ட் தோழர்களின் தோழமை சுட்டுதல் என்னும் அளவில் தான் இருந்தது. நேரு குடும்பம் அல்லாதவர்கள் காங்கிரசின் அதிகார பதவியில் இருக்கும் போது கூட அந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் அவர்களின் தலைமை பொறுப்பை நீடிப்பதா? அல்லது தவிர்ப்பதா ?என்ற முடிவெடுக்கும் அளவுகோலாக தான் இருந்தது. அதே காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற வலுவான ஆயுதம் தனக்கு எதிராக நிற்கும் போது அதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராக இருப்பதும் அதே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆயுதமாக்கி எந்த விலை கொடுத்தேனும் தன் கட்சி அல்லாத மாற்றுக் கட்சியின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் இயல்பு.

அந்த வகையில் நேரு குடும்பம் அவர்களின் வாரிசுகளின் ஆட்சியில் காங்கிரஸ் பலம் இல்லாத அல்லது நெருக்கடியில் இருக்கும் நிலையில் கூட கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள் எல்லாம் காங்கிரசை ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கும் திரை மறைவு செய்கையாக மட்டும் இருந்ததே தவிர ஒரு நாளும் அது உண்மையான நம்பிக்கை இல்லா தீர்மானங்களாக இருந்ததில்லை என்பதே உண்மை. காரணம் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் இடையேயான புரிந்துணர்வு இந்து – இந்திய எதிர்ப்பு ஒற்றுமையும் அவ்வளவு வலுவானது.

நேரு குடும்பம் அல்லாத ராஜீவின் குடும்பத்திற்கு சற்றும் இணக்கமாக இல்லாமல் கடுமை காட்டிய நரசிம்மராவ் என்ற ஒரு உறுதியான பிரதமர் இருக்கும் காலத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மறைமுகமாக நேரு குடும்பமே ஆதரித்து எப்படினும் நரசிம்மராவை வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்த காலத்தில் கூட பதவியையும் அதிகாரத்தையும் இழக்க தயார் இல்லாத பெருந்தலைகள் ஒன்று கூடி பிரயத்தனம் செய்து கடைசியில் குதிரை பேரத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார்கள். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சார்ந்த எம்பிகளுக்கு கோடி கணக்கில் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததும் அது சம்பந்தமான காங்கிரசின் கள்ள மவுனமும் இன்று வரை அவர்களின் பண அரசியல் வரலாறு.

ஆனால் காங்கிரசிற்கு சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்க்கட்சி என்பதை கடந்து எதிரி கட்சியாகவே இருந்த இந்துத்துவ தேசியம் பேசும் பாஜக கட்சி முதன் முதலில் 98 ல் ஆட்சியில் அமர்ந்த போது 13 நாளில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க கோரி அது இயலாமல் வாஜ்பாய் 13 ஆம் நாளில் பதவி துறந்தார். அடுத்து அவரின் தலைமையில் மீண்டும் அமைந்த ஆட்சியும் 18 எம்பிக்களை கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் செயலால் 18 மாதங்களில் ஆட்சியை இழந்தார் .வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றும் எதிர் கட்சிகளின் கூட்டு சதியால் ஒற்றை வாக்கில் தோல்வி அடைந்தார். எனினும் இது முடிவல்ல வெறும் தொடக்கம் மட்டும் தான். எங்களின் குறைந்த பட்ச செயல் திட்டம் – எங்களின் சித்தாந்தம் – இந்து தேசியம் என்ற எங்களின் அடி நாதத்தில் இருந்து அடி பிறழ்வதைவிட ஆட்சி அதிகாரத்தை விட்டு அகல்வது மேலானது என்ற உண்மையோடும் நேர்மையான அரசியலோடு இருக்கும் கட்சி என்ற கர்வத்தோடு தான் நாங்கள் இன்று பதவியில் இருந்து வெளியேறுகிறோம். இன்று தொடங்கிய இந்தப் போராட்டம் இன்னும் நீளும். என்றேனும் ஒரு நாள் வலுவான மக்கள் பெரும்பான்மையோடு நிச்சயம் பாஜக ஆட்சியில் அமரும். இன்று ஆண்டிமடம் என்று நீங்கள் எங்களை பார்த்து எப்படி சிரிக்கிறீர்களோ? அன்று உங்களை பார்த்து தேசமே சிரிக்கும் என்று அமைதியாக வார்த்தைகளை உதிர்த்தார்.

அன்று அவர் அவையில் பேசும் போது கொக்கரித்த காங்கிரஸ்காரர்களுக்கு சுஷ்மாஸ்வராஜ் என்னும் பாஞ்சால சிங்கம் பதிலடி கொடுத்தது .காங்கிரஸ்காரர்களே இன்றைய தேதி போட்டு எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் வெறும் இரண்டு எம்பிக்களோடு நாடாளுமன்றத்தில் அடி எடுத்து வைத்தவர்கள். இன்று ஆட்சி அதிகாரத்தில் வந்திருக்கிறோம் ஆனால் பெரும்பான்மை இல்லாமல் பதவியில் இருந்து இறங்குகிறோம் மறுக்கவில்லை ஆனால் இன்று ஆங்காங்கே பறக்கும் காவிக்கொடி ஒரு நாள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றி கொடி கட்டி பறக்கும் .அன்று எதிர்க் கட்சி வரிசை என்ற தகுதி கூட உங்களுக்கும் உங்கள் கட்சிகளுக்கும் மக்கள் வழங்கும் தயாராக இருக்க மாட்டார்கள் ஆனால் இந்த அவை முழுவதும் பாஜகவின் எம்பிக்கள் மத்திய ஆட்சி பாஜகவின் தனி பெரும்பான்மையோடு என்ற காலம் நிச்சயம் வரும் இன்று எங்களை பார்த்து நீங்கள் ஏளனமாக சிரிக்கலாம் அன்று உங்களையும் உங்களையும் மலிவான அரசியலையும் பார்த்து நாடே சிரிக்கும் என்று கர்ஜித்தார். இன்று அவரின் இடத்தில் மோடிக்கு பக்க பலமாக ஸ்மிருதி இரானி என்ற வங்கத்து சிங்கம் காங்கிரஸ் காரர்களை நார் நாராய் கிழித்து தொங்கவிட்டு இருக்கிறது.

தீர்க்கதரிசிகளின் வாக்கு ஒரு நாளும் பொய்ப்பதில்லை. அன்று அவர்கள் கணிப்புப்படி ஆட்சி அதிகாரம் அதிகாரக் கொள்ளை என்பதை தவிர்த்து வேறு எதையும் யோசிக்காத காங்கிரசின் முகமூடியை அன்று அவர்கள் நாகரீகமாக வெளிச்சம் போட்டு காட்டினார்கள். இன்று அதே காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை தேச விரோத அரசியலும் மக்கள் விரோத அரசியலும் அவர்களாலேயே வெளிப்பட்டு நாடு சிரிக்கிறது. ஆனால் அவர்கள் இன்னுமும் பாஜக மோடியை பார்த்து ஆணவ சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் கடந்தாலும் தன்னை சுய பரிசோதனை செய்யவும் தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் கொஞ்சமும் தயார் இல்லாத காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – திமுக கூட்டணிகள் மணிப்பூர் விவகாரத்தை வைத்து மோடிக்கு எதிராக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அதற்கான வரைவை தயாரிப்பதற்கு ஒரு குழுவும் தாக்கல் செய்ய 4 எம்பிக்களும் இருந்தால் போதுமானது. ஆனால் அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நேருக்கு நேர் எதிர் கொள்ளவும் அதற்கு உரிய பதிலை வழங்கி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களின் தன்னம்பிக்கையை உடைத்து பார்க்கவும் நிச்சயம் தன் தரப்பில் அரசியல் ஞானமும் நேர்மையும் கொள்கையில் உறுதிப்பாடும் அனைத்திற்கும் மேலாக மக்கள் நல அரசியலை மட்டுமே செய்கிறோம் என்ற திமிரும் இருந்தால் மட்டுமே சாத்தியம். அது மட்டுமே எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை துணிச்சலை ஆட்சியாளர்களுக்கு வழங்கும். அந்த வகையில் என் நாடு – என் மக்கள் . நாட்டையும் மக்களையும் விட வேறு எதுவும் பெரிதில்லை என்ற ஒற்றை சித்தாந்தத்தில் நாட்டை வழி நடத்தி போகும் பாஜகவின் மோடி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அங்குலம் அங்குலமாக சிதைத்து போட்டு இருக்கிறார்.

ஒவ்வொரு முறை காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் வருவதும் அதை பாஜக எதிர்கொண்டு சிலமுறை தோற்றதும் கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை எதிர்த்து துவம்சம் செய்வதும் என்று பாஜகவின் வெற்றி வரலாறு தொடர்ந்த போதிலும் ஏதாவது ஒரு விஷயத்தில் எங்காவது ஒரு வார்த்தையாவது மோடி உதிர்த்து விடமாட்டாரா ? அதை வைத்து அடுத்து ஒரு ஆறு மாதத்திற்கு அரசியல் ஆதாயம் தேட முடியாதா ? என்ற ஒற்றை எதிர்பார்ப்பில் மட்டுமே காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறது. தவிர அந்தக் கட்சி நன்கு அறியும் மோடியின் மீது நாம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் சல்லிக்காசு பெறாத ஒரு தீர்மானம் என்று. ஆனாலும் கட்சிக்காரர்களை கட்டி வைக்கவும் – எதிர்க்கட்சிகளை தன் பக்கம் நிற்க வைக்கவும் – கம்யூனிஸ்ட் – திமுக உள்ளிட்ட கட்சிகளை தன் தலைமையின் கீழ் செயல்பட வியூகம் வகுக்கவும் மட்டுமே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற ஆயுதத்தை காங்கிரஸ் பிரயோகிக்கிறதே தவிர அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும் அருகதை கூட தனக்கோ தன் கட்சிக்கோ இல்லை என்ற உண்மையும் காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை. தேசிய அரசியலில் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை என்பதன் வெளிப்பாடு தான் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்.

பொதுவாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்போது ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் இருக்கும் குற்றம் – குறைகள் – அதன் மீதான அவர்களின் அலட்சியம் – அதனால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் – தங்களின் மூலமாக அதற்குத் தர இருக்கும் தீர்வுகள் என்று ஆக்கபூர்வமான விஷயங்களை முன்னிறுத்தி தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிவார்கள் அதுதான் மக்களின் நம்பிக்கையை பெறும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டுமே ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைக்கும். ஆனால் காங்கிரஸ் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானமும் அதற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் – திமுக உள்ளிட்ட கட்சிகள் பேசிய பேச்சுக்களும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல அவரவர் முகத்தில் அவரவர் உமிழ்ந்து கொள்வதைப் போல ஒரு அவமதிப்பை தான் அவர்களுக்கு தேடி கொடுத்திருக்கிறது.

மணிப்பூர் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அதே நேரத்தில் சொந்த மக்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகள் இழப்பை கொடுத்து விடக்கூடாது என்ற கவனத்தோடும் படிப்படியாக மத்திய அரசு அங்கு முன்னேறிச் செல்லும் போது தோல்வியின் அச்சத்தில் இருக்கும் சதிகாரர்களின் வெறியாட்டத்தை நன்கு அறிந்த போதும் அதைப்பற்றி பேசவோ அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவோ தயாராக இல்லாத எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து அதே மணிப்பூர் விவகாரத்தில் பிண அரசியல் செய்வதும் அதை முன்வைத்து பாஜக ஆட்சிக்கு ஏதாவது ஒரு களங்கத்தை கற்பித்து விடலாம் என்று துடிப்பதும் அவர்கள் இன்னுமும் மக்கள் விரோத – இந்திய விரோத சித்தாந்தத்தில் தான் ஒன்றிணைந்து நிற்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

எங்கே மோடி? அவரை வரச் சொல்லுங்கள். மணிப்பூரை பற்றி பேச சொல்லுங்கள் என்று இரண்டு வார காலம் அவை முடக்கி வைத்தவர்கள். மோடி வருகிறேன். நான் பதில் கூறுகிறேன். என்று சொன்னவுடன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்தவர்கள். ஆனால் மோடி வந்து பதில் கொடுக்கும் போது அதை காது கொடுத்து கேட்கவோ அதிலிருந்து வாதங்களை எடுத்து வைத்து எதிர் கேள்வி கேட்கவோ தயாராக இல்லை .

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் அதே நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிர் தரப்பிலிருந்து என்ன பதில் சொல்கிறார்கள்? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதுதான் குறைந்தபட்ச அரசியல் நாகரீகம். ஆனால் அவர்கள் பதில் அளிக்கும் வேளையில் கும்பலாக வெளிநடப்பு செய்வார்கள் எனில் இவர்கள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் யாரை ஏமாற்றும் செயல் ? அல்லது யாரைக் காப்பாற்றும் முயற்சி ? என்பதை அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் இனி தங்கள் சொந்த கட்சியின் நம்பிக்கை கூட இழக்க நேரிடும்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் வேளையில் அதற்கு பதில் அளிக்கும் ஒரு பெண் அமைச்சர் – இதரப் பெண் அமைச்சர்கள் உறுப்பினர்கள் பக்கம் பார்த்து ஒரு பெரும் பாரம்பரியம் கொண்டதாக சொல்லிக் கொள்ளும் ஒரு தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் – முன்னாள் கட்சித் தலைவர் இந்த தேசத்தை ஆள்வதற்கு தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று நினைக்கும் ஒரு குடும்பத்தின் பரம்பரை வாரிசு அத்துனை பெண் எம்பிக்களையும் பார்த்து பறக்கும் முத்தத்தை பறக்கவிட்டு அவையில் இருந்து வெளியேறுகிறார் எனில் இவர்களின் பண்பாடும் மக்கள் மீதான இவர்களின் அக்கறையும் எப்படிப்பட்டது? என்பதை சாதாரண மக்கள் முதல் மணிப்பூரில் உயிர் வலியோடு கலவரத்தில் தவிக்கும் பாவப்பட்ட மக்கள் வரை நிச்சயம் என்று உணர்ந்திருப்பார்கள்.

இதே மணிப்பூர் மக்களின் பெண்களுக்கு அவமதிப்பு நேர்கிறது . அதற்கு எங்களுக்கு நீதி வேண்டும் என்று பொங்கி எழுந்த தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியின் ஒரு பெண் எம் பி அந்த நிறைந்த அவையில் மகாபாரதத்தை முன்னிறுத்தி திரௌபதிக்கு நிகழ்ந்த அவமதிப்பு பற்றி எல்லாம் வண்டி வண்டியாக பேசினார். ஆனால் அதே நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் பெண்களின் மீது அவமதிப்பு யார் செய்தாலும் எங்கு நிகழ்ந்தாலும் அதை ஏற்கக் கூடியது அல்ல. அது அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கண்டிக்க கூடிய செயல் . உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன் என்று மரியாதையாக பேச தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் மொத்தமாக கூடாரத்தை காலி செய்து வெளியேறுகிறார்கள். காரணம் அவர் அடுத்த பேசிய விஷயம் இன்று பெண்களின் மானம் மரியாதையைப் பற்றி பேசும் இதே திமுகவின் ஆட்சிக்காலத்தில் 89 ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த தமிழகத்தின் ஆஇஅதிமுக கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்போதைய ஆளுங்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் அதன் தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் கண்முன்னே மானபங்கப்படுத்தப்பட்டது அவரது சேலை கிழிந்து அவர் அவமதிக்கப்பட்டு அவையை விட்டு வெளியேறியதும் அவர் சுட்டிக் காட்டும் போது திமுகவினர் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் இல்லை. பின் இவர்களுக்கு பெண்களின் மானம் மரியாதை பற்றி பேசும் தகுதி எங்கிருந்து வந்தது.?

மொத்தமாக எதிர்க்கட்சிகள் என்ற போர்வையில் இந்த தேசத்திற்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் நடந்து விடக்கூடாது என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த நாங்கள் பாஜகவிற்கு எதிர்க்கட்சிகள். ஆனால் உண்மையில் நாங்கள் இந்தியா என்னும் தேசத்திற்கும் மக்களுக்கும் எதிரி கட்சிகள் என்பதை அவர்களின் நம்பிக்கைய இல்லா தீர்மானத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி . ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி. பாஜகவின் எண்ணமும் சொல்லும் செயல்பாடும் எப்போதும் தேசத்தையும் மக்களையும் அவர்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தியே இருக்கும் என்பதை கடந்த காலங்களில் எப்படி வாஜ்பாய் நிரூபித்தாரோ? என்று அவரது சிஷ்யரும் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறைந்தார் போல நிரூபித்திருக்கிறார். ஆம் . நீங்கள் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். எந்த மணிப்புரை முன்னிறுத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழியப்பட்டதோ? அந்த மணிப்பூரில் நாங்கள் நிரந்தரமான அமைதிக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து வருகிறோம் ஆனால் உங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2028லும் இதே போல் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நீங்கள் முன்மொழிந்து கொண்டு இருப்பீர்கள். இன்று முதல் 10 இடங்களுக்குள் வல்லரசு நாடுகளோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறும் இந்திய பொருளாதாரம் அன்று முதல் 3-இடத்திற்குள் இருக்கும். அப்போதும் உங்களின் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருக்கும் என்று எதிர் கட்சிகளின் எண்ணத்தையும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்ற வியூகத்தோடு பாஜக எப்போ தயாராகிவிட்டது என்ற உண்மையையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதன் மூலம் போற்றுவார் போற்றலும் போற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! என் கடன் பணி செய்து கிடப்பதே. என்ற வகையில் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியாவிற்கு உள்ளே என்ன செய்ய வேண்டும்? இந்தியாவிற்காக சர்வதேச சமூகத்திடம் என்னவெல்லாம் பெற்றுத் தர வேண்டும்? என்று ஒரு பெரும் முனைப்போடு அவர் பயணப்படுவது தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் உள்நாட்டில் நீங்கள் எவ்வளவுதான் மலிவான அரசியல் செய்தாலும் எத்தனை அவதூறுகள் பரப்பி மக்களை குழப்பினாலும் அத்தனையும் புறம் தள்ளி மக்கள் அதீத்தம் நம்பிக்கையோடு பாஜகவின் பக்கம் நிற்கத்தான் போகிறார்கள். அந்த வகையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை பலத்தோடும் மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கும். நாங்கள் மீண்டும் மூன்றாவது முறையாக ஆளும் கட்சியாகி பாரதத்தின் வளர்ச்சி பாதையில் ஒரு புதிய மைல் கல்லை எட்டப் போகிறோம். அன்றும் நீங்கள் தோல்வியின் விரக்தியில் நின்று மீண்டும் மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற தேந்து போன பல்லவியை தான் பாடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்ற அத்தனை விஷயங்களையும் ஒற்றை வரியில் சொல்லி எதிர்க்கட்சிகளின் ஆட்சி அதிகார கனவில் மண்ணள்ளி போட்டிருக்கிறார் 56 அங்குல மோடி.

எந்த மோடியை சிறுபான்மை விரோதி – பாசிஸவாதி – பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிபவர் . என்று ஏளனம் பேசி இத்தனை நாள் அவையை முடக்கினார்களோ அந்த 56 அங்குல மோடி அவையில் நுழைந்து பதில் தரும் போது அனைவரும் தலை தெறிக்க ஓடி ஒளிகிறார்கள். ஆம். அவர்கள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பாஜக இன்னும் கூடுதலாக மக்கள் நம்பிக்கை பெற காரணமாகி விட்டது. அதே நம்பிக்கை இல்லா தீர்மானம் அதை முன் மொழிந்த காங்கிரஸ் – வழி மொழிந்த அதன் கூட்டணி கட்சிகள் என்று அத்தனை கட்சிகளின் தன்னம்பிக்கையை சிதைத்து போட்டதே உண்மை. அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் தீர்மானம் மீதும் நம்பிக்கை இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தி விட்டது. அதன் வெளிப்பாடு தான் அவர்கள் எல்லோரும் அவையை விட்டு தாங்களாகவே வெளியேறி ஓடி ஒளிந்த வீர வரலாறு.

ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை. கட்சி – சித்தாந்தம் முக்கியம். அதைவிட நாடும் மக்களும் முக்கியம். என்ற ஒற்றை புள்ளியில் வாஜ்பாய் என்னும் மாமனிதன் ஏற்றி வைத்த அணையா தீபத்தை அகண்ட தீபமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் வாஜ்பாயின் வழிவந்த மோடி என்னும் ராஜரிஷி.


Share it if you like it