தமிழகத்தில் எந்த எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை – அண்ணாமலை !

தமிழகத்தில் எந்த எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை – அண்ணாமலை !

Share it if you like it

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள தம்மம்பட்டியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஆரம்பித்து விட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 31 மாதங்கள் ஆகிய நிலையில் 511 தேர்தல் வாக்குறுதியில் 20 தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை. ஆனால் முதல்வர் 99 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என கூறுகிறார். நான் பல இடங்களில் கூறியுள்ளேன் பொய் பேசுவது ஒரு வியாதி. முதல்வருக்கு வந்திருப்பது வியாதி தூக்கமின்மை அவரே கூறியுள்ளார். எனவே முதல்வர் நன்றாக தூங்கினால் உண்மையை பேச ஆரம்பித்துவிடுவார்.

ஊழல் செய்வது மட்டுமே அமைச்சர்களின் முழு வேலையாக உள்ளது. 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அமைச்சர் புழல் சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் 20 நாட்களில் புழல் சிறைக்கு செல்வார். இது போன்ற மோசமான ஆட்சியை இந்திய வரலாற்றிலேயே யாரும் பார்த்திருக்க முடியாது. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம் சிகாமணியின் ஐந்தாண்டு கால சாதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய பெருமையை பேசியது மட்டும்தான். தொகுதி மக்களின் பிரச்னைகளை பற்றியோ அவற்றைத் தீர்ப்பது பற்றியோ பேசியதில்லை.

இந்த நடைபயண யாத்திரையில் ஒருபுறம் திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் மறுபுறம் ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என்பதே நோக்கம். இன்னும் இந்த நாட்டில் பல்வேறு பணிகள் செய்ய வேண்டி உள்ளதால் மீண்டும் ஐந்தாண்டு ஆட்சியை கேட்கிறோம். பத்தாண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள எந்த எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. பாராளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு அமர்ந்து போராட்டம் பண்ணுவது. பிரதமர் மோடியை திட்டுவது உள்ளிட்டவை மட்டுமே முழுநேர வேலையாக 39 எம்பி-களும் வைத்துள்ளனர்.

ஒரு ரூபாய் லஞ்ச ஊழல் இல்லாமல் சிறப்பான ஆட்சியை பிரதமர் மோடி கொடுத்துள்ளார் இந்தியா கூட்டணி கமிஷன் அடிப்பதற்கும் கொள்ளையடிப்பதற்கும் கூட்டணி வைத்துள்ளனர். காய்ந்து போன மாடுகளாக இந்தியா கூட்டணி உள்ளனர். என அண்ணாமலை பேசினார்.


Share it if you like it